தேசிய தேர்வு முகமை அமைப்பை மேம்படுத்துவது மற்றும் அது நடத்தும் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து உள்ளது.
நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர், நெட் தேர்வானது முறைகேடு புகார் காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. என்டிஏ அமைப்பு விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படும். மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், என்டிஏ நடத்தும் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன், சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து ஆராய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து உள்ளது.
இந்த குழு உறுப்பினர்களாக
எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா,
ஐதராபாத் மத்திய பல்கலை துணை வேந்தர் பிஜே ராவ்,
சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி,
டில்லி ஐஐடி டீன் ஆதித்யா மிட்டல் மற்றும்
கர்மயோகி பாரத் அமைப்பு குழு உறுப்பினர் பங்கஜ் பன்சால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய கல்வித்துறை இணை செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த குழுவானது.
தேர்வு நடவடிக்கைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தம்
தகவல் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது
என்டிஏவின் செயல்பாடு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இரண்டு மாதங்களில் அறிக்கை அளிக்கும்.