மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பல பகுதி மக்கள் படகுகளில் பயணிக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் தண்ணீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மக்கள் இன்னும் வெள்ள பாதிப்பினால், உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் “மக்கள் சேவையே மகேசன் சேவை”யாக செய்து வரும் தன்னார்வ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் – சேவாபாரதி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 2,500 ஆண்களும், 500க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து, மக்கள் துயர் துடைக்கும் அரும்பணியில், டிசம்பர் 4ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்காக, அலைபேசி எண்ணையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர். இதன் மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட அழைப்புகள், உதவி வேண்டி வந்துள்ளது. சேவாபாரதி அமைப்பின் மூலம், டிசம்பர் 6ம் தேதி நிலவரப்படி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் – சேவாபாரதி, சென்னையில் உள்ள பல இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறது. சிட்லபாக்கம், பதுவஞ்சேரி,பீர்க்கங்கரனை,நல்லம்பாக்கம், அடையார் வசந்த நகர், அடையார் சாஸ்திரி நகர், ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர் லாங்ஸ் கார்டன் ரோடு, கோடம்பாக்கம் காமராஜ் காலனி, கோடம்பாக்கம் புத்த தெரு, தி .நகர் தெற்கு போக் தெரு உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களில் இலவச முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்களின் மூலமாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
