வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த எழுத்தாளர் மற்றும் ஒரு அரசியல்வாதி ஆவார். அவர் இந்துத்வாவின் இந்து தேசியவாத சித்தாந்தத்தை உருவாக்கியவர்.
வீர சாவர்க்கர் 1883-ம் ஆண்டு மே 28ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் மற்றும் ராதாபாய் சாவர்கர் ஆவர். உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோதே சாவர்க்கர் அரசியலில் ஈடுபட்டார். அதன்பிறகு புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போதும் அதைத் தொடர்ந்தார். அவரும் அவரது மூத்த சகோதரரான கணேஷ் சாவர்க்கரும் இணைந்து அபினவ் பாரத் சொசைட்டி என்ற ரகசிய சங்கத்தை நிறுவினர். இந்த சங்கத்தின் நோக்கம் பாரதத்தில் இருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி இந்து தர்மத்தை நிலைநாட்டுவதாகும்.
வீர சாவர்க்கர் தேசிய தலைவர்களில் ஒருவரான லோகமான்யா திலக்கை தன் அரசியல் குருவாக கருதினார். லோகமான்யா திலக்கும் வீர சாவர்க்கரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவர் லண்டனில் சட்டம் படிக்க உதவித்தொகை கிடைக்க உதவினார். லண்டனில் சட்டம் படிக்கும் போது இந்தியா ஹவுஸ் மற்றும் ஃப்ரீ இந்தியா சொசைட்டி போன்ற அமைப்புகளுடன் சாவர்க்கர் தொடர்பு கொண்டார். புரட்சி மூலம் முழு இந்திய சுதந்திரம் பெற வேண்டும் என்று அவர் புத்தகங்களை எழுதினார். 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போர் குறித்து அவர் எழுதிய புத்தகமான ‘தி இந்தியன் வார் ஆஃப் இன்டிபென்டன்ஸை’ பிரிட்டிஷ் அதிகாரிகள் தடைசெய்தனர்.
சாவர்க்கர் லண்டனில் இருந்த போது மகாத்மா காந்தியை முதல்முறையாக சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே பல விவாதங்கள் நடந்தன. மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் போராட வன்முறையை கையில் எடுப்பதற்கு எதிராக இருந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்திருந்தாலும் இருவரது கருத்துக்களும் வெவ்வேறாக இருந்தன. இந்த சூழ்நிலையில் லண்டனில் உள்ள புரட்சிகரக் கட்சியான இந்தியா ஹவுஸுடன் சாவர்க்கர் தொடர்பு கொண்டிருந்ததால் அவர் 1910ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டார்.இந்தியா திரும்பும் வழியில் மார்செய் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டபோது சாவர்க்கர் தப்பியோடி பிரான்சில் தஞ்சம் அடையும் முயற்சியை அரங்கேற்றினார்.
இருப்பினும், சர்வதேச சட்டத்தை மீறி, பிரெஞ்சு துறைமுக அதிகாரிகள் அவரை ஆங்கிலேயரிடம் திருப்பி அனுப்பினர். இந்தியா திரும்பியதும், சாவர்க்கருக்கு இரட்டைஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் செல்லுலார் சிறைக்கு சாவர்க்கர் அனுப்பப்பட்டார். சிறையில் இருந்த சாவர்க்கர் தான் விடுதலை ஆனால் மட்டுமே தன் தேசப்பணியை தொடர முடியும் என்பதை உணர்ந்து தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கருணை மனுக்களை அனுப்பி கொண்டிருந்ததார். முதலில் அவரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அவரது முயற்சியின் பலனாக 1921ம் ஆண்டு மே 2ம் தேதி சாவர்க்கர் அந்தமானில் இருந்து ரத்னகிரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்னகிரியில் சிறையில் இருந்த ஆண்டுகளில், சாவர்க்கர் ஒரு சிறந்த பத்திரிகையாளரானார். அங்கு இருந்த போது அவர் தனது “எசென்ஷியல்ஸ் ஆஃப் இந்துத்துவா” என்ற புத்தகத்தை எழுதினார். இதில் அவரது இந்துத்துவா கோட்பாட்டை வகுத்திருந்தார். அவரது சிறைவாசத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களை சாவர்க்கர் சந்தித்தார். இறுதியில் சாவர்க்கர் 1924ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் பிரிட்டிஷாரின் நிபந்தனையால் 1937ம் ஆண்டு வரை ரத்னகிரி மாவட்டத்திலேயே தங்கியிருந்தார். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பம்பாய் ஜனாதிபதி அரசாங்கம் அவரை நிபந்தனையின்றி விடுவித்தது. அதன் பிறகு வீர சாவர்க்கர் 1937 க்குப் பிறகு பரவலாகப் பயணிக்கத் தொடங்கினார். இந்து அரசியல் மற்றும் சமூக ஒற்றுமையை ஆதரிக்கும் சக்திவாய்ந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் ஆனார். சமுதாயத்தில் நிலவிய சாதிபாகுபாடுகள் மற்றும் தீண்டாமைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்து மகாசபை அரசியல் கட்சியின் தலைவராக, இருந்த சாவர்க்கர் இந்தியாவில் இந்து தேசம் என்ற கருத்தை ஆதரித்தார். நாட்டை விடுவிப்பதற்கும் எதிர்காலத்தில் இந்துக்களைப் பாதுகாப்பதற்கும் அவர் இந்துக்களை ராணுவமயமாக்கத் தொடங்கினார்.
1942 ஆம் ஆண்டு நடந்த வார்தா அமர்வில் ஆங்கிலேயர்களிடம் “இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், ஆனால் உங்கள் படைகளை இங்கேயே வைத்திருங்கள்” என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வீர சாவர்க்கர் காங்கிரஸ் செயற்குழுவின் முடிவை கடுமையாக விமர்சித்தார். ஜப்பானின் தாக்குதலை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பின்னாளில் இந்த ராணுவம் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சியை கைப்பற்ற உதவலாம் என சாவர்க்கர் கருதினார். மேலும் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையும் சாவர்க்கர் கடுமையாக எதிர்த்தார்.
மகாத்மா காந்தி படுகொலை வழக்கு
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட போது அதில் சாவர்க்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் 1929 ஆம் ஆண்டில், ரத்னகிரி சிறையில் இருந்த போதே காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே முதன்முறையாக சாவர்க்கரைச் சந்தித்தார். அவருடன் பல ஆண்டுகள் தொடர்ப்பு இருந்ததால் காந்தியின் படுகொலைக்கான சதியில் சாவர்க்கருக்கும் பங்கு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த சம்பவம் நடந்து முடிந்து பல வருடங்கள் ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அவ்வப்போது எழுப்பி வருகின்றன. கடந்த 1998ம் ஆண்டு மற்றும் 2014 இல், பாஜக ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பான விவாதங்கள் அதிகளவில் எழுந்தன.
இறுதிக்காலம்
காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் “இந்து தேசியவாத கருத்துக்களை” தெரிவித்ததற்காக அரசாங்கத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் அரசியல் நடவடிக்கைகளை கைவிடுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரசியல் நடவடிக்கை மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, அவர் அதை மீண்டும் தொடங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக 1966ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அவர் உயிரிழக்கும் வரை இந்து தேசியவாத பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
தன் இறுதிக்காலத்தில் சமாதிநிலையை அடைய விரும்பிய வீர சாவர்க்கர் 1966ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்க துவங்கினார். இறுதியில் பிப்ரவரி 26ம் தேதி அவர் உயிர் துறந்தார். இறப்பதற்கு முன், சாவர்க்கர் தனது உறவினர்களிடம் தனது இறுதிச் சடங்குகளை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் இந்து மதத்தின் 10வது மற்றும் 13வது நாள் சடங்குகளை நடத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் அவரது மகன் விஸ்வாஸ் மறுநாள் பம்பாயின் சோனாப்பூர் பகுதியில் உள்ள மின்சார தகனக் கூடத்தில் அவரது இறுதிச் சடங்குகளை செய்தார். அவரது தகனத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்தனர்.
சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் 2,000 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் அணிவகுத்துச் சென்றனர். வீர சாவர்க்கரின் வீடு, உடமைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவரது நினைவாக அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்டு பிளேயரில் உள்ள விமானநிலையத்திற்கு 2002ம் ஆண்டு வீர சாவர்க்கர் சர்வதேச விமானநிலையம் என பெயரிடப்பட்டது. தேசத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வீர சாவர்க்கர் குறித்து எதிர்தரப்பினர் பல விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர் செய்த சமூகப்பணிகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது.
வீர சாவர்க்கர் பிறந்தநாளான இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர். எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பதிவில்,பாரத மாதாவின் பெருமைமிக்க மகன் வீர்சாவர்க்கரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரது அடங்காத ஆவி மற்றும் தேசபக்தி எண்ணற்ற நபர்களை சுதந்திர இயக்கத்தில் சேர தூண்டியது. அவரது மரபு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.