ககன்யான் திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் இயந்திரத்தின் மனித மதிப்பீட்டை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்
ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.
பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரோ பல சோதனைகளை நடத்தியது. முதல் கட்ட சோதனையில் ஏவுகணையின் சோதனைப் பறப்பு நடக்கிறதா என்று சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் குப்பியில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டன.
விண்வெளி வீரர்கள் ராக்கெட்டில் பயணிக்கும் போது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை பாதுகாப்பாக மீட்கும் சோதனை நடத்தப்பட்டன.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ள முதல் ஆளில்லா ககன்யான் பணிக்காக அடையாளம் காணப்பட்ட விமான எஞ்சினின் ஏற்றுக்கொள்ளும் சோதனைகளையும் இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ தனது சமூகவலைத்தள பக்கத்தில் சமீபத்திய சோதனையுடன், ககன்யான் திட்டத்திற்கான CE20 இன்ஜினின் தரைத் தகுதிச் சோதனைகள் நிறைவடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.