நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி . முழு முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது.
இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் ஊர்வலமும் பிரசித்தி பெற்று நடைபெறுமோ, அதே போல வடமாநிலங்களில் 3 – 10 நாட்கள் வரை விசேஷமாக விநாயகர் சதுர்த்தி நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ளது. இதனால் விநாயகர் சிலை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்து முன்னணியும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்க பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர், கொடுவாய் ஒன்றியம் கோவில்பாளையம் பகுதியில், இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வீடு தோறும் விநாயகர் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநாயகர் சிலைகள் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ். கிஷோர் குமார் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.