நாட்டின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7 சதவீதமாக இருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் ‘இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0’ மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் (கிஃப்ட்) நகரத்தை புதிய யுகத்தின் உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக மாற்ற மத்திய அரசாங்கம் விரும்புகிறது.
இன்று, முழு உலகமும் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இது தானாக நடக்கவில்லை. இது இந்தியாவின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தக்க சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பாகும்.
இந்தியா இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் fintech சந்தைகளில் GIFT International ஒன்றாகும். நிதிச் சேவை மையமாக உருவாகி வருகிறது. புதுமையான யோசனைகளுடன் உலகின் தீவிரமான பிரச்சனைகளை தீர்க்க நிதி தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இளைஞர்களின் திறமையால் இந்தியா இன்று உலக திறன் மையமாக மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், இன்று நாட்டில் பல்வேறு வர்த்தக வசதிகள் உள்ளன. வலுவான தகவல் தொழில்நுட்பத் திறன் மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுடன், நிதித் துறை பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பைப் பெறுகிறது.
நாட்டு இளைஞர்களின் திறமை சாதகமாக உள்ளது. இது இணையற்ற வாய்ப்புகளை உருவாக்குகிறது. குறிப்பாக, சிவில் விமானப் போக்குவரத்தில் இன்று நாட்டில் தினசரி 4 லட்சம் பயணிகள் பறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. வரும் ஆண்டுகளில் 1,000 விமானங்கள் வாங்கப்பட உள்ளன” என்றார்.
நிகழ்ச்சியில், யுனெஸ்கோவின் ‘மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில்’ குஜராத்தின் பாரம்பரிய கர்பா நடனம் இடம் பெற்றதற்கு மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.