பாரத பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடி வந்து கைகுலுக்கிய வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகியவை ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டில் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் கடந்த 26-ம் தேதி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கடந்த 25-ம் தேதி இரவு தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார் மோடி. அவரை ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், இந்தியர்கள் மத்தியில் உரையாடினார் பிரதமர் மோடி.
மறுநாள் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். மோடியுடன் அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல், தென்னாப்பிரிக்கா, உக்ரைன் நாட்டு தலைவர்களும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பின்னர், 2 மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில், ஜி-7 நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அங்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பாரத பிரதமர் மோடியைப் பார்த்ததும், அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரை நோக்கி நடந்து வந்தார். ஆனால், இதை பிரதமர் மோடி கவனிக்கவில்லை. எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பின்புறம் தோளை தட்டி அழைத்தார் ஜோ பைடன். மோடி திரும்பி பார்க்கவே, கையை நீட்டி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார் ஜோ பைடன். பதிலுக்கு பிரதமர் மோடியும் ஜோ பைடனின் தோளை தட்டி வாழ்த்துத் தெரிவித்தார். பாரத பிரதமர் மோடியை பார்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தானே சென்று வாழ்த்துத் தெரிவித்திருப்பது உலக அரங்கில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் ரசிகர்களும், தேச பக்தர்களும் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.