மசூதியில் பேய் ஓட்டுவதாகக் கூறி, பட்டியல் சமுதாயப் பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற இஸ்லாமிய மத குருவை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டகுடியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சில தினங்களாகவே செல்விக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. எனவே, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் காட்டியிருக்கிறார்கள். அப்படியும் செல்விக்கு உடல்நிலை சரியாகவில்லை. அப்போது, அவரது உறவுக்காரப் பெண் ஒருவர், செல்விக்கு பேய் பிடித்திருக்கலாம் எனவும், பெண்ணாடத்திலுள்ள மசூதியில் ஒருவர் பேய் ஓட்டுவதாகவும், அவரிடம் கூட்டிச் சென்று காட்டலாம் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தனது சித்தப்பா மற்றும் அந்த உறவுக்காரப் பெண் ஆகியோருடன் செல்வியையும் அழைத்துக் கொண்டு பெண்ணாடத்திலுள்ள அந்த குறிப்பிட்ட மசூதிக்குச் சென்றிருக்கிறார் ராஜு. அங்கு, அப்துல் கனி என்கிற அந்த மதகுருவை அடையாளம் காட்டி இருக்கிறார் அந்த உறவுக்காரப் பெண். பின்னர், அப்துல் கனியிடம் நடந்த விவரங்களை கூறிய ராஜு, தனது மனைவிக்கு பிடித்திருக்கும் பேயை ஓட்டித் தருமாறு கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ராஜு, அவரது சித்தப்பா, உறவுக்காரப் பெண் ஆகிய 3 பேருக்கும் தாயத்துடன் கூடிய ஒரு கருப்பு நிற கயிறைக் கொடுத்து கட்டிக் கொள்ளும்படி கூறிய அப்துல் கனி, பிறகு அனைவரையும் வெளியில் காத்திருக்கும்படி சொல்லி இருக்கிறார்.
அப்துல் கனி சொன்னதை நம்பி, அனைவரும் வெளியில் வந்து காத்திருந்தனர். எனினும், தனது மனைவிக்கு எப்படி பேய் ஓட்டுகிறார் என்பதை பார்க்க ராஜுவுக்கு ஆவலாக இருந்திருக்கிறது. எனவே, மசூதியில் இருந்த ஒரு துவாரம் வழியாக உள்ளே நடப்பதை பார்த்திருக்கிறார். அப்போது, செல்வியின் தலை முடியை பிடித்து இழுத்து தனது மடியில் போட்டுக் கொண்ட அப்துல் கனி, ஊதிபத்தியை பற்ற வைத்து செல்வியின் மூக்கில் காட்டி இருக்கிறார். இதை சுவாசித்த சில விநாடிகளிலேயே செல்வி மயக்கமடைந்து விட்டார். பிறகு, செல்வியின் காலைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றிருக்கிறார் அப்துல் கனி.
இதைக் கண்டு பதறிப்போன ராஜு, வேகமாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று, அப்துல் கனியை தள்ளிவிட்டு தனது மனைவி செல்வியை மீட்டுக் கொண்டு வெளியே வந்திருக்கிறார். பின்னர், நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார் ராஜு. ஆனால், போலீஸார் புகாரை வாங்காமல், தட்டிக் கழிக்கப் பார்த்திருக்கிறார்கள். இதனிடையே, விஷயம் காட்டுத் தீ போல பரவி, மாவட்ட எஸ்.பி. வரை சென்று விட்டது. பின்னர், அவரது உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்துல் கனி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அப்துல் கனியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கி இருக்கின்றனர்.