உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதியின் உள்ளே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்திருக்கிறது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் சுற்றுச் சுவரில் சிருங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. இங்கு ஹிந்துக்கள் தினமும் பூஜை நடத்தி வந்தனர். ஆனால், 1992-ம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய மசூதி இடிக்கப்பட்ட பிறகு, சிருங்கார கவுரி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆகவே, சிருக்கார கவுரி அம்மன் ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த அனுமதி தர வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங், லக்ஷ்மி தேவி, சீதா சாஹு, மஞ்சு வியாஸ், சோஹன் லால் ஆர்யா உள்ளிட்ட 5 ஹிந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
இது ஒருபுறம் இருக்க, காசி விஸ்வநாதர் கோயிலில் வெறும் நந்தி மட்டும் இருப்பதால், அதன் எதிரே உள்ள ஞானவாபி மசூதியில்தான் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் கூறிவந்தனர். இந்த சூழலில், டெல்லி பெண்கள் மனு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு குழுவையும் நியமித்தனர். இக்குழுவினர் நடத்திய ஆய்வு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஹிந்துக்கள் கூறிவந்ததுபோலவே, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இந்த சூழலில், ஹிந்து பெண்களின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உகந்தது என்று மாவட்ட நீதிமன்றம் கூறியது. இதனிடையே, மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் எந்தக் காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய ‘கார்பன் டேட்டிங்’ முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஹிந்து மனுதாரர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்திருந்தது.
இதையடுத்து, கார்பன் டேட்டிங் ஆய்வை நடத்த வேண்டும் எனவும், ஹிந்து கடவுள்களின் சிலைகள் மசூதிக்குள் இருப்பதாகவும் மனு தாக்கல் செய்த 5 ஹிந்து பெண்களில் 4 பேர் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என்று சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சிவலிங்க விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர ஹிந்து தரப்பும், இஸ்லாமிய தரப்பும் ஒப்புக்கொண்டன. ஆகவே, குறிப்பிட்ட பகுதியை சீல் வைத்து பாதுகாப்பதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் நீட்டித்திருக்கிறது.