மைசூரு விருந்தினர் இல்லத்தில், விலை உயர்ந்த பொருட்கள் மாயமான விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும்படி, தலைமைச் செயலருக்கு, நிர்வாக பயிற்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரி, மைசூரு மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டபோது, தற்காலிகமாக மைசூரின் நிர்வாக பயிற்சி மையத்தின் வளாகத்தில் உள்ள, விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
கடந்த 2020 அக்டோபர் 2 முதல், நவம்பர் 4 வரை, அங்கு தங்கிய அவர், அதன்பின் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். அவர் சென்ற பின், விருந்தனர் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மர்மமான முறையில் மாயமானது தெரியவந்தது.
இந்தப் பொருட்களை தன்னுடன் கொண்டு சென்றதாக ரோஹிணி மீது புகார் எழுந்தது. பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை திருப்பி ஒப்படைக்கும்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, 2020 டிசம்பர் 16, 2021 ஜனவரி 8, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில், மூன்று கடிதங்களை மைசூரு நிர்வாக பயிற்சி மையத்தினர் எழுதியிருந்தனர். இதற்கு ரோஹிணி சிந்துாரி பதிலளிக்கவில்லை.
அதன்பின் 2022 நவம்பர் 30ல், நிர்வாக பயிற்சி நிர்வாகம், மற்றொரு கடிதம் எழுதியது. இதற்கு பதிலளித்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ‘பயிற்சி மையத்தின் விருந்தினர் இல்லத்தில் இருந்த பொருட்கள் எதுவும் இங்கு இல்லை’ என கூறினர்.
இதற்கிடையில், அப்போது மைசூரு மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷில்பா நாக் – ரோஹிணி இடையே நிலவிய பனிப்போர் காரணமாக, அவரையும் கலெக்டர் ரோஹிணி சிந்துாரியையும் அரசு இடமாற்றம் செய்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனராக ரோஹிணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போதும் கடிதம் எழுதிய நிர்வாக பயிற்சி நிறுவனம், ‘விருந்தினர் இல்லத்தின் பொருட்களை, திருப்பித் தாருங்கள். இல்லாவிட்டால் அதற்கான தொகையை தாருங்கள்’ என, கேட்டது. இதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து, நிர்வாக மேம்பாட்டுத் துறை தலைமை செயலருக்கு, நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மைசூரின் விருந்தினர் இல்லத்தில், ரோஹிணி சிந்துாரி சில மாதங்கள் தங்கியிருந்தார். அவர் காலி செய்து சென்ற பின், விருந்தினர் இல்லத்தில் பல பொருட்களை காணவில்லை.
தொலைபேசி மேஜை, கோட் ஹேங்கர், பிளாங்கெட், மைக்ரோ ஓவன், மெத்தை, மூங்கில் நாற்காலிகள், கம்ப்யூட்டர் மவுஸ், ட்ரே, யோகா மேட், தட்டுகள், டீப்பாய் உட்பட பல்வேறு பொருட்கள் மாயமாகின. இவற்றின் மதிப்பு 77,296 ரூபாய்.
இந்த தொகையை, ரோஹிணி சிந்துாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். ‘டிடி’ மூலமாக மைசூரின் நிர்வாக பயிற்சி மைய இயக்குனர் பெயருக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.