சென்னை வேப்பேரியில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் தர்மபுரி கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கு தற்போது பேசு பொருளாகி வருகிறது.
சென்னை வேப்பேரியில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த எட்டு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் திடீரென வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. மேலும், 11 மாணவர்களுக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பி.சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் கேன்டீன் முறையாக பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் மிக மோசமான நிலையில் இருந்தது. அங்கிருந்த உணவு பொருட்கள் அழுகிய நிலையிலும், குடிநீர் அசுத்தமாகவும் இருந்துள்ளது. இதனால், கேன்டீனுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த சம்பவத்தை போல் தர்மபுரியிலும் நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பரஹள்ளியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இதில், வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மாணவ – மாணவியர், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
அதில், 50 பேர் நேற்று காலை 10:00 மணி அளவில் திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி, கை, கால் வலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலுள்ள ஒகேனக்கல் நீரை குடித்ததால் தான் ஏற்பட்டு இருக்கும் என கூறினர். இதையடுத்து, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில் மருத்துவக் குழுவினர், மாணவ – மாணவியருக்கு பள்ளி வளாகத்தில் சிகிச்சை அளித்தனர். கடம்பரஹள்ளி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, குடிநீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. பணம் கொடுத்து தனியார் பள்ளியில் சேர்க்க முடியாததால் தான் ஏழை பெற்றோர்கள் அரசு பள்ளிக்கு அனுப்புகின்றனர். அப்படி இருக்கையில் பள்ளி மாணவவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்வது, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொல்வது என பள்ளி ஆசிரியர்களே வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ? பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்கள். அவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் இதுபோல் வேலை வாங்கினால் இவர்கள் சும்மா இருப்பார்களா ? உங்கள் குழந்தைகள் உங்களுக்கு தங்கம் என்றால் அவர்கள் குழந்தைகள் அவர்களுக்கு தங்கம். நீங்கள் ( ஆசிரியர்கள்) அவர்களின் எதிர்காலத்தை மாற்றுவீர்கள் என்றுதான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.
இதுபோன்ற காரணத்தினால் தான் அரசு பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசுப்பள்ளி என்பது வரப்பிரசாதம். அதனை வரசாபமாக மாற்றி விடாதீர்கள். அரசு பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு சுத்தமான தண்ணீரும் சுகாதாரமான கழிப்பறையும் என அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவற்றை முறையாக பணியாளர்கள் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.