அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது ஆசிரியரை ஆபாசமாக திட்டியும் அவரை தாக்க முயன்ற காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர். அப்துல்கலாம் தொடங்கி இன்று மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைவரும், முன்பு ஒரு காலத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களாக இருந்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, பல மேதைகளையும், அறிவு ஜீவிகளையும் உருவாக்கிய பெருமை அரசு பள்ளியின் ஆசிரியர்களை சேரும். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்த காலம் போய் இன்று மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கும் காலம் உருவாகி வருகிறது என்பதே நிதர்சனம்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் உள்ளது அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளியை, சேர்ந்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் உள்ள தனது ஆசிரியர் நாற்காலியின் மீது படுத்துள்ளான். அப்பொழுது, மாணவரின் தவறை சுட்டிக்காட்டிய தாவரவியல் ஆசிரியர் சஞ்சய் காந்தியை பார்த்து மாணவன் ஆபாசமாக திட்டிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பெயரில் கல்வி அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அப்பள்ளியில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில், பயின்று வந்த மாணவர்கள் பார்வையற்ற ஆசிரியர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே அவர் முன்பு நடனம் ஆடி கேலி, கிண்டல் செய்த காணொளி, கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுதவிர, தேனி மாவட்டம் தேவதானபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பயின்று வரும் மாணவன் ஒருவன் கடந்த மாதம் இதே போன்று தனது ஆசிரியரை ஆபாசமாக திட்டியுள்ளான். மேலும், ‘ஏறுனா ரயிலு…எறங்குனா ஜெயிலு… என்று ஆசிரியரை பகீரங்கமாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.