மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் சண்டை போட்டுக் கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமீபகாலமாக ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர். அப்துல்கலாம், பிரதமர் மோடி, தொடங்கி இன்று மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைவரும் முன்பு ஒரு காலத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களாக இருந்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, பல மேதைகளையும், அறிவு ஜீவிகளையும் உருவாக்கிய பெருமை அரசு பள்ளியின் ஆசிரியர்களை சாரும். ஆனால், இன்று நிலைமையோ முற்றிலும் தலைகீழ். மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கும் காலம் உருவாகி வருகிறது என்பதே கசப்பான உண்மை.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் உள்ளது அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளியை, சேர்ந்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் உள்ள தனது ஆசிரியர் நாற்காலியின் மீது ஏறி படுத்துள்ளான். அப்பொழுது, மாணவரின் தவறை சுட்டிக்காட்டிய தாவரவியல் ஆசிரியர் சஞ்சய் காந்தியை பார்த்து மாணவன் ஆபாசமாக திட்டிய சம்பவம் அண்மையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படியாக, அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சூழலில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்டு கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் லிங்க் இதோ.
சமீபத்தில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் சாலையிலேயே படுத்து உருண்டு.. தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிக்கொண்ட சம்பவம் அடங்குவதற்குள், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.