சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெரும்பாலையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று காலை முதல் சிவகங்கை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அந்த பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் கூரையானது ஓடுகளை வைத்து கட்டியுள்ளனர். மேலும் கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் அந்த பள்ளியின் மேற்கூரையிலிருந்த ஓடுகள் வழியாக தண்ணீர் பள்ளியின் உள்ளே ஒழுகியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் தான் சாப்பிட வைத்திருந்த தட்டுக்கள் மற்றும் குடையினை பிடித்துக்கொண்டு வகுப்பறைக்குள் கூனி குறுகி இருந்துள்ளனர். இதனால் மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தங்களுக்கு பாதுகாப்பான புதிய பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்குமாறு பள்ளி நிர்வாகமும்,ஊர் மக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் பள்ளிக்கூடத்தை சீரமைக்கும் பணியை செய்திருக்கலாம் என்று வைரலாகும் காணொளியை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.