தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2017 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில்20 வகையான பொருட்களுடன், ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும், கரும்பு கொள்முதலுக்கான பணத்தை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “தமிழகத்தில் அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை சர்க்கரை கொள்முதல்செய்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு மக்களுக்கு வழங்க வெல்லம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டது. அந்த வெல்லம் உருகிவிட்டதாகவும், கெட்டுப்போய்விட்டதாகவும் புகார்கள் வந்தன. இந்த மனு கடைசிநேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு உகந்தது இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே?
கரும்பு கொள்முதல் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? இதனால் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்வந்துவிடப் போகிறது. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
இப்போது முடியாவிட்டாலும், அடுத்த பொங்கல் பண்டிகையின்போதாவது செய்யலாம். பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.