நேற்று காலை நடைப்பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் வெளியேறிய காரணம் என்ன என்பது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பிப்ரவரி 12, 2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்த நிகழ்வுகள் பின்வருமாறு:
1) கடந்த 09.02.2024 அன்று அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு உரை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது. ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்தன.
2) மாண்புமிகு ஆளுநர் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்து கோப்பைத் திருப்பி அனுப்பினார்.
(அ) தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோருக்கு ஆளுநர் கடந்த காலங்களிலும் கடிதங்களை எழுதியிருந்தார்.
(ஆ) ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் “சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை” சட்டமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காக இருக்கக்கூடாது.
3) மாண்புமிகு ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
4) மாண்புமிகு ஆளுநர் அவர்கள் (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆளுநர் உரையில் முதல் பத்தியை படித்தார். அதில் திருவள்ளுவரின் திருக்குறள் (738) அடங்கியுள்ளது. அதன்பிறகு ஆளுநர் உரையில் உண்மைக்கு புறப்பான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை கேலிகுரியாக்கி விடும் என்ற காரணத்தால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு தனது மரியாதையை
வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பேரவை
கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து
தனது உரையை முடித்தார்.
5) அதன் பிறகு ஆளுநரின் முழு உரையின் தமிழாக்கத்தை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் வாசித்தார். மாண்புமிகு ஆளுநர் உரை முடியும் வரை அமர்ந்திருந்தார்.
6) மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநரின் உரையை வாசித்து முடித்தவுடன், நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட படி, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். அச்சமயம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சே பின்பற்றுபவர் என தெரிவித்தார். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார்.
மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவை தலைவர் தனது நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், மாண்புமிகு ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்.