மதம், மொழியால் நாடு பிளவுபடுவதை ஏற்க முடியாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.
சென்னை கவர்னர் மாளிகையில் மேற்குவங்க மாநிலம் உருவான தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மேற்குவங்க அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, “மேற்குவங்கமும், தமிழகமும் நம் நாட்டின் உருவத்தை பலமுறை மாற்றி இருக்கின்றன. தமிழகம் பாரதம் எனும் கருத்தியலின் தூய்மைத் தன்மையை உருவாக்கியதாக திகழ்கிறது. அதேபோல, மேற்குவங்கம் பாரதம் எனும் கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. நமது சுதந்திரத்தை நோக்கி நடைபோட பாடலை பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார். அவர், பாரத மாதாவை பற்றி அதிகம் பாடியிருக்கிறார். செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரத மாதாவை பாரதி புகழ்ந்திருக்கிறார்.
1972-ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் அறிக்கையின்படி, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் கடந்த 100 முதல் 200 ஆண்டுகளாகத்தான் பணக்கார நாடுகளாக இருக்கின்றன. ஆனால், நம் பாரதம் 1,800 ஆண்டுகளாக பணக்கார நாடாக இருந்து வருகிறது. இந்தியா இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் சிக்கி இருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் குற்ற உணர்ச்சியில் இருக்கிறது. இந்நாடு, தன்னை நினைத்தே பெருமைப்படும் சூழல் உருவாக வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதனால்தான், சிகாகோ உரைக்குப் பிறகு நேராக சென்னைக்கு வந்தார். அவர் இந்தியாவை தன் பின்னே நடைபோட வைத்தார். இந்தியாவின் புதிய தலைமுறை இளைஞர்களை அவர் உருவாக்கினார். போரின் காரணமாக மனித இனம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றது. ஆனால், இந்தியா மனித இனம் மொத்தமும் ஒரே குடும்பம் என்ற பார்வையை எப்போதோ பெற்றது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சிந்தனை இந்தியாவிற்கு எப்போதோ வந்துவிட்டது. இந்தியா தான் இந்த பூமியை வழிநடத்திச் செல்ல தகுதியுடையது. மேற்குவங்கம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். 1905-ம் ஆண்டு இந்தியாவை பிரிக்க நினைத்தபோது, தமிழ்நாட்டில் வ.உ.சி., பாரதியார் ஆகியோர் எதிர்த்தனர். ஆனால், 1947-ல் முஸ்லீம் லீக் கொண்டு வந்த பரிந்துரை அடிப்படையில், மேற்குவங்கம் பிரிந்து, கிழக்கு பாகிஸ்தான் உருவானது. நாடு என்பது மதம், மொழி ஆகியவற்றால் பிளவுபடுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நமக்கு முன் இருக்கும் நோக்கம் மிகப்பெரியது. இதை வென்றெடுப்பதை நாம் முக்கியமாகக் கொள்ளவேண்டும். நம் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்பும் பலவீனங்களை நாம் தூக்கி எறிய வேண்டும்” என்றார்.