குஜராத்தில் நடந்த கர்பா நடன நிகழ்ச்சியில் கல்வீசி தகராறில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்ததோடு, குற்றவாளிகளை மின்கம்பத்தில் கட்டி வைத்து தரமாக ‘கவனித்த’ சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது உந்தலா கிராமம். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இக்கிராமத்தில் பாரம்பரிய கர்பா நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, நடன நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றும்படி இஸ்லாமியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், குறுகிய கால இடைவெளியே இருந்ததால், நிகழ்ச்சியை மாற்றவில்லை. மாறாக, நிகழ்ச்சியால் இஸ்லாமியர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி கர்பா நடன நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது, நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆரிப், ஜாஹிர் ஆகியோர் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர், நவராத்திரி கர்பா நடன அரங்கிற்குள் நுழைந்து கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து உள்ளூர் மக்கள் தரப்பில் லோக்கல் போலீஸாரில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலையச் செய்தனர். அப்போது, போலீஸார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
இதையடுத்து, கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை, பொதுமக்கள் மத்தியில் அங்கிருந்த மின்கம்பம் அருகே இழுத்துச் சென்றனர். பின்னர், அந்த நபர்களை ஒரு போலீஸ்காரர் மின்கம்பத்தோடு சேர்த்து பிடித்துக் கொள்ள, மற்றொரு போலீஸ்காரர் லத்தியால் புட்டத்தில் நாலு சாத்து சாத்தினர். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ஹிந்து பண்டிகைகளின்போது கல்வீசி தாக்குதல் நடத்தும் இதுபோன்ற நபர்களை இப்படி கவனித்தால்தான் அடங்குவார்கள் என்று போலீஸுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், போலீஸாரின் இத்தகைய செயலுக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.