பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Share it if you like it

குஜராத் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீவைத்து கொளுத்தினர். இதில், 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் நடந்த கலவரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இக்கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மோடி உட்பட யாருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனால், மேற்படி வழக்கை குஜராத் மாநில போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று கூறி, கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த நீதிபதிகள், குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) ஒன்றை 2009-ம் ஆண்டு அமைத்தனர். சுமார் 3 ஆண்டுக்கால விசாரணைக்குப் பிறகு, 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை எஸ்.ஐ.டி. தாக்கல் செய்தது. அதில், “குஜராத் கலவரத்துக்கும், மோடிக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்திருந்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், எஸ்.ஐ.டி. விசாரணை அறிக்கைக்கு எதிராக, ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வாத, பிரதிவாதங்கள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர் நீதிபதிகள். அதன்படி, இன்று நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஐ.டி. அறிக்கைக்கு எதிராக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Share it if you like it