குஜராத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து 5 ஆண்டுகளாக மிரட்டி வந்த ஆசிம் நிஜாம் ஷேக்கை போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயது ஆசிம் நிஜாம் ஷேக். இஸ்லாமியரான இவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை 16 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது, அதை வீடியோ எடுத்திருக்கிறார். இதன் பிறகு, ஆசிம் நிஜாம் ஷேக் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வீடியோவை காட்டி மிரட்டி, தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது நண்பரான ரோனக் படேல் என்பவருக்கு திருமணம் செய்துவைக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.
இதனிடையே, அப்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு மணமகன் பார்த்து நிச்சயம் முடித்து விட்டனர். இதையறிந்த ஆசிம் நிஜாம் ஷேக், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த வீடியோவை, அப்பெண்ணுக்கு பார்த்திருந்த மணமகனுக்கு அனுப்பி, திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி இருக்கிறார். இத்தகவல் பெண் வீட்டாருக்குத் தெரியவரவே, போலீஸில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணை 5 வருடங்களாக ஆசிம் நிஜாம் ஷேக் மிரட்டி வந்த சம்பவம் தெரியவந்தது.
இதையடுத்து, கெர்காம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (2) (n), 506 (2), தகவல் தொழில்நுட்பச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிம் நிஜாம் ஷேக், ரோனக் படேல் ஆகிய இருவரையும் லவ்ஜிகாத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் தேடுவதை அறிந்த ஆசிம் நிஜாம் ஷேக்கும், கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து சமீபத்தில் பரோலில் வெளியே வந்த ரோனக் படேலும் தலைமறைவாகி விட்டனர். எனினும், மும்பை ஹோட்டலில் பதுங்கி இருந்த ஆசிம் நிஜாம் ஷேக் போலீஸார் கைது செய்தனர்.