‘சோலோகாமி’ எனப்படும் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் புதுவித திருமணத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் எடுத்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. பட்டதாரி பெண்ணான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். பிந்துவின் தந்தை தென்னாப்பிரிக்காவில் வேலை செய்து வருகிறார். தாயார் அகமதாபாத்தில் வேலை செய்து வருகிறார். பிந்துதான் எதிர்வரும் ஜூன் 11-ம் தேதி தன்னை தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். ஹிந்து திருமண முறைப்படி இவரது திருமணம் நடைபெறவிருக்கிறது. இத்திருமணத்துக்கு பிந்துவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இத்திருமணம் குறித்து ஷமா பிந்து கூறுகையில், “எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால், மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன். எனக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஆகவே, என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இதை சுய அன்பின் வெளிப்பாடாகவே கருத வேண்டும். தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ண்டவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அவ்வாறு இல்லை என்று தெரிந்தது. சிலர் சுய திருமணத்தை பொருத்தமற்றதாக உணரலாம். ஆனால், இதன் மூலம் நான் கூற வருவது பெண்கள் முக்கியமானவர்கள் என்பதுதான். எனது முடிவை குடும்பத்திடம் கூறும்போது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்றார்.
ஏற்கெனவே, கடந்தாண்டு பிரேசிலியின் மாடலான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். 2020-ம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருமணத்துக்கு பிந்துவுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் அதேசமயம் எதிர்ப்புகளும் எழத் தொடங்கி இருக்கின்றன. பிந்து ஒரு பைத்தியம் என்று பலரும் வசைபாடி வருகின்றனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசிய குஜராத் பா.ஜ.க. நகரப் பிரிவின் துணைத் தலைவர் சுனிதா சுக்லா, “பிந்து மனநிலை சரியில்லாதவர். இதுபோன்ற திருமணங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானது. இவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார். ஹிந்து கலாசாரத்தில் ஒரு ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.