பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் எப்படி ‘மோடி’ என்பது பொதுவான குடும்பப் பெயராக இருக்கிறது?” என்று கூறியிருந்தார். இதையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல் இழிவுபடுத்தி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சூரத் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை கடந்த 17-ம் தேதி முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து சூரத் நீதிமன்ற தலைமை ஜூடியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீனும் வழங்கப்பட்டது.
அதேசமயம், இத்தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் ராகுல் மேல்முறையீடு செய்யலாம். அதுவரை அவருக்கு இந்த சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.