தைப்பூச திருநாள் : வந்தவினையும், வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே !

தைப்பூச திருநாள் : வந்தவினையும், வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே !

Share it if you like it

சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார். இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார். சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும். அதோடு, அசுரர்களை வதம் செய்வதற்காக பழனி மலை முருகனின் பராசக்தி, சக்திவேலை அளித்த நாள் இந்த தைப்பூச நாளாகும். சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது என்கின்றன புராணங்கள்.

சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது. அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே. பவுர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரமும் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.


Share it if you like it