ஒரு காரின் நம்பர் ரூ.70 கோடி ரூபாய்க்கும், ஒரு பைக்கின் நம்பர் ரூ.15 லட்சத்துக்கும் ஏலம் போயிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாகவே, யாராக இருந்தாலும் வாகனம் வாங்கும்போது, அதன் நம்பர் பேன்ஸியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி பேன்ஸி நம்பர் வாங்குபவர்களும் உண்டு. இதேபோலதான், செல்போன் சிம் கார்டுகளையும் பேன்ஸி நம்பராக பார்த்து வாங்குவார்கள். இதில், சிலருக்கு அலாதி பிரியம். ஆகவே, இதை பயன்படுத்தி வியாபாரமாக்கி வருகின்றன சில நிறுவனங்களும், மாநில அரசுகளும்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது பைக்கின் நம்பர் பிளேட்டை 15 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். ஹரியானா மாநிலம் சண்டிகரைச் சேர்ந்தவர் பிரிஜி மோகன். இவர் 71,000 ரூபாய்க்கு ஒரு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கினார். இந்த பைக்கின் எண் பேன்ஸி நம்பராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஹரியானா மாநில அரசு வருவாயை பெருக்குவதற்காக பேன்ஸி நம்பர்களை ஏலம் விட்டு விற்பனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பேன்ஸி நம்பர் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட பிரிஜி மோகன், தனது ஆக்டிவா வாகனத்துக்கு 15.4 லட்சம் ரூபாய் கொடுத்து CH01 CJ 001 என்ற வி.ஐ.பி. எண்ணை வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், தற்போது துபாய் நாட்டில் 70 கோடி ரூபாய் கொடுத்து தனது காருக்கு பேன்ஸி நம்பரை வாங்கி இருக்கிறார் ஒருவர். அதாவது, துபாயில் ‘Most Noble Numbers’ என்ற பெயரில் வாகனங்கள் மற்றும் செல்போன்களுக்கான பேன்ஸி எண்கள் வழங்கும் ஏல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்நாட்டைச் சேர்ந்த அரபு ஷேக் ஒருவர், AA8 என்ற ஒற்றை இலக்க கார் நம்பரை 70 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார். உலகளவில் அதிக விலைக்கு ஏலம் போன கார் எண்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதேபோல, கடந்தாண்டு நடந்த ஏலத்தில் AA9 என்ற எண்ணை 79 கோடி ரூபாய்க்கு துபாய் ஷேக் ஒருவர் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் கிடைத்த 70 கோடி ரூபாயை ‘ஒன் பில்லியன் மீல்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள 50 நாடுகளில் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் மாபெரும் தொண்டு திட்டமே இந்த ஒன் பில்லியன் மீல்ஸ் திட்டமாகும். இதே ஏலத்தில் F55 என்ற கார் எண் 8.23 கோடி ரூபாய்க்கும், V66 என்ற எண் 7.91 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.