தொழிலதிபர் கொலை வழக்கில் துப்புக் கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக தவித்து வந்த போலீஸார், மனைவியை அபகரிக்க கணவரை கொலை செய்த முகமதீனை கைது செய்திருக்கிறார்கள். மேலும், தலைமறைவாக இருக்கும் பப்லு கானை தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் பாலம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேஷ். தொழிலதிபர். இவரது மனைவி நீது. இத்தம்பதிக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த சூழலில், தொழிலதிபரான தர்மேஷ் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில், தான் புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்கிற விவரம் தெரியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக போலீஸார் தவித்து வந்தனர். இதனிடையே, பப்லு கானும், முகமதீனும் காரில் சென்று தர்மேஷை சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதை வைத்து, போலீஸார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
அதேசமயம், தர்மேஷ் கொலை தொடர்பாக, நீது போலீஸில் புகார் அளிக்கவில்லை. இது போலீஸாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே, நீதுவை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். பின்னர், வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீஸார் நீதுவிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான், நீதுவையும், அவரது பணத்தையும் அபகரிக்க, பப்லு கான் திட்டம் தீட்டி தர்மேஷை கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, தர்மேஷ் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கும் தர்மேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இதையறிந்த நீது, அப்பெண்ணை வேலையிலிருந்து நீக்கி விட்டு, புதிதாக ஒரு பெண்ணை வேலைக்குச் சேர்த்தார். அப்பெண்ணுக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த பப்லு கான் என்பவனுடன், தகாத உறவு இருந்திருக்கிறது.
இந்த வேலைக்காரப் பெண் மூலம் நீதுவுக்கு பப்லு கானுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்பழக்கம் காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. தர்மேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பப்லு கான், நீதுவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, வீட்டிலிருந்த நகை, பணம் என தொடர்ந்து கறந்து வந்திருக்கிறான். நீதுவும் பப்லு கானை நம்பி சுமார் 650 கிராம் நகைகளை கொடுத்திருக்கிறார். இந்த நகைகளை விற்றும், நீதுவிடமிருந்து வாங்கிய பணத்தை வைத்தும், தனது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டி வந்திருக்கிறான் பப்லு கான். இதனிடையே, தர்மேஷை கொலை செய்தால்தான் தாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று பப்லு கான் ஆசைவார்த்தை கூறவே, நீதுவும் சம்மதித்திருக்கிறார்.
இதையடுத்து, தர்மேஷை கொலை செய்ய பப்லு கான் திட்டம் தீட்ட, நீதுவும் உடந்தையாக இருந்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி இரவு புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடத்தில் தர்மேஷ் தூங்கி இருக்கிறார். இத்தகவலை பப்லு கானிடம் நீது தெரிவிக்க, அவன் தனது நண்பன் முகமது முகமதீனுடன் சேர்ந்து தர்மேஷை கொல்ல சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கிறான். நள்ளிரவு 2 மணியளவில் புதிய கட்டடத்திற்குச் சென்ற இருவரும், தர்மேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். தாங்கள் வந்த காரின் நம்பர் பிளேட்டை மாற்றிய பப்லு கான், கொலை திட்டத்தை அரங்கேற்றிய பிறகு, தனது சிம் கார்டையும், முகமதீன் சிம் கார்டையும் மாற்றி விட்டான் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நீதுவையும், முகமதீனையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார், தலைமறைவாக இருக்கும் பப்லு கானை தேடி வருகின்றனர்.