ஹரியானா மாநிலத்தில் பருவமழை பொய்த்ததை தொடர்ந்து, விவசாயிகள் வாடிப்போன தங்கள் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏக்கருக்கு 2,000 ரூபாய் வழங்குவதற்கான ஒப்புதலை ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
பழங்கள், பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களுக்கும் இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதாக தெரிவித்தார். ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறிய முதல்வர் நயாப் சிங் சைனி, “நானும் ஒரு விவசாயியின் மகன், அவர்களின் வலி எனக்கு புரிகிறது” என்று கூறினார்.
இந்த இழப்பீட்டு தொகை பெறுவதற்கு விவசாயிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ‘மேரி பசல், மேரா பையோரா’ என்கிற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
முன்னதாக 10 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தவிர, நிலுவையில் உள்ள கால்வாய் நீர் பாசனக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதாகவும் முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.