வாழும் உரிமை உண்டு..!

வாழும் உரிமை உண்டு..!

Share it if you like it

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. அந்த வாக்கிற்கு ஏற்ப, உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியும், வாழ்ந்தும் வருகின்றனர். எந்த ஊரில் இருந்தாலும், தன்னுடைய மொழியை மறக்காமல், தனது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, தினமும் தன்னுடைய மொழியை பேசி வருவதே, “தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் தனிச் சிறப்பு”.

தமிழர்கள், உலகு எங்கிலும் பரவி, வாழ்ந்து வருகின்றனர். நமது நாட்டில், தமிழ் நாடு, புதுச்சேரியை போல, நாடு எங்கிலும், தமிழர்கள் உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா என தென் இந்தியாவிலும்,  மகாராஷ்டிரா, டெல்லி என நாட்டின் மற்ற மாநிலங்களிலும் பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

“குஜராத் தமிழ்ச் சங்கம்”, “பூனா தமிழ்ச் சங்கம்”, “மும்பை தமிழ்ச் சங்கம்”, “டெல்லி தமிழ்ச் சங்கம்” என தாங்கள் இருக்கும் இடத்தில், தமிழர்களுக்கு என ஒரு அமைப்பை நிறுவி, அதை சிறப்பாக நடத்தி, தமிழ் வளர்ச்சிக்கு என பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியும் வருகின்றனர்.

அது போலவே…

சிங்கப்பூர்,

லண்டன்,

பிரான்ஸ்,

இந்தோனேசியா,

இத்தாலி,

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன்,

இலங்கையில் உள்ள கொழும்பு, மன்னார், வவுனியா, ஜாப்னா,

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர்,

கனடாவில் உள்ள டொரோன்டோ, மாண்ட்ரியல்,

நார்வேயில் உள்ள ஓஸ்லோ…

என பல தேசங்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உலக அளவில் ஆளுமை செய்யும் தமிழர்கள்:

  • கயானா நாட்டின் பிரதமர் திரு மோசசு வீராசாமி நாகமுத்து
  • சிங்கப்பூரின் துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முக ரத்தினம்
  • சீயாச்சல் நாட்டின் வெளி விவகாரத் துறை அமைச்சர் திரு பேட்ரிக் ஜார்ஜ் பிள்ளை
  • சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு செல்லப்பன் ராமநாதன் (SR நாதன்)
  • கூகுள் நிறுவனத்தின் தலைமை உயர் அதிகாரி திரு சுந்தர் பிச்சை
  • பெப்சி நிறுவனத்தின் தலைமை உயர் அதிகாரி திருமதி இந்திரா நூயி…

மற்றும் பலர்…

இந்திய அளவில் ஆளுமை செய்யும் தமிழர்கள்:

  • அறிவியல் விஞ்ஞானி திரு அப்துல் கலாம்
  • இஸ்ரோ விஞ்ஞானி திரு சிவன்
  • நோபல் பரிசு வென்ற திரு C.V. ராமன்
  • கணித மேதை திரு ராமானுஜம்
  • முன்னாள் குடியரசுத் தலைவர் திரு R வெங்கட் ராமன்…

மற்றும் பலர்…

வேற்றுமையில் ஒற்றுமை:

கண்ணகிக்கு சிலை எடுக்க நினைத்த மன்னர் சேரன் செங்குட்டுவன், வடக்கே படை எடுத்து, இமய மலையில் இருந்து கல் எடுத்து கொண்டு வந்து, அதை கங்கையில் நீராடிய பின்னர், தமிழகம் கொண்டு வந்து, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகில், கண்ணகிக்கு கோவில் எழுப்பினார்.

அதுவே, “மங்கல தேவி கண்ணகி கோவில்” என அழைக்கப் படுகிறது. அந்த கோவிலில் , “சித்திரை பௌர்ணமி” அன்று, வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும்.

வட இந்தியாவில் வாழ்பவர்கள், தெற்கே உள்ள ராமேஸ்வரத்திற்கு வந்து தரிசனம் செய்வதும்,

தென் நாட்டில் வாழ்பவர்கள், வடக்கே உள்ள இமய மலை, காசிக்குச் சென்று தரிசனம் செய்வதும்,

மேற்கே உள்ளவர்கள், கிழக்கே உள்ள கொல்கத்தா காளியை தரிசனம் செய்வதும்,

கிழக்கே உள்ளவர்கள், மேற்கே உள்ள குஜராத் சோமநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதும்…

நமது நாட்டில் எப்போதும் இருந்து வரும் வழக்கம். அதுவே “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடைமொழிக்கு சான்று.

தமிழகத்தில் பிறந்த திருவள்ளுவருக்கு, உத்தரகாண்டில் உள்ள ஹரித்வாரில் சிலை வைப்பதும், வங்காளத்தில் பிறந்த விவேகானந்தருக்கு தமிழகத்தில் சிலை வைத்தும் கொண்டாடுவதே, நமது தேச ஒற்றுமைக்கு, சிறந்த எடுத்துக் காட்டு. அந்த ஒற்றுமையே, நமது நாட்டிற்கு, பெருமை மிகு அடையாளம்.

வாழும் உரிமை உண்டு:

சமீபகாலமாக ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசும் மக்களுக்கும் எதிராக பல்வேறு வகையான, எதிர்ப்பு கருத்துக்களை, சிலர் எழுப்பி வருகின்றனர். அவர்கள் யாரென உற்று நோக்கினால்,  ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், அல்லது பிரிவினைவாதிகளாக இருக்கின்றனர்.

எல்லோரும், அவரவர் விரும்பும் மாநிலத்திற்கு சென்று வாழ, அனைத்து விதமான  உரிமைகளும் உண்டு. தங்களுடைய வேலை நிமித்தமாகவோ அல்லது மற்ற சில காரணங்களாலோ, தாங்கள் விரும்பிய இருப்பிடத்திற்கு சென்று, தொழில் செய்து, வாழும் உரிமை, எல்லோருக்கும் உண்டு.

யாரும் யாரையும் ஏமாற்றாமல், வஞ்சிக்காமல், நல்ல முறையில், அறம் சார்ந்த வழியில் தொழில் செய்தால், அவர்களுக்கு சமுதாயத்தில் நிச்சயமாக மரியாதை கிடைக்கும் என்பதை, நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்ந்து எடுக்கப் பட்டதும், ராகுல் காந்தி அவர்கள் தென் இந்தியாவில் உள்ள வயநாடு தொகுதியில் இருந்து மக்கள் அவைக்குத் தேர்ந்து எடுக்கப் பட்டதுமே,  நமது நாட்டின் ஒற்றுமையை, உலகிற்கு எடுத்துக் காட்டும்.

ஏன் இந்த போராட்டம்:

மார்வாடிகள் வெளியேற  வேண்டி, சமீபத்தில் பிப்ரவரி எட்டாம் தேதி, திருச்சியில் உள்ள கம்மாளர் வீதியில் உள்ள அனைத்து கடைகளையும், மூடிடக் கோரி,  முழு நேர அடைப்பு செய்ய, “தமிழக மக்கள் ஜனநாயக கட்சி” அழைப்பு விடுத்தது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக K.M. சரீப் உள்ளார். அந்த அமைப்பானது,  2016 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அன்று, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சம்பந்தப் பட்ட 7 பேரின் விடுதலைக்காக, மனிதச் சங்கிலி போராட்டத்தை, மார்ச் 9, 2019 அன்று, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தியது.

10 ஆண்டு காலம், சிறை தண்டனை முடித்த, ஆயுள் சிறை கைதிகளை, விடுதலை செய்யக் கோரி, 2020 ஆம் ஆண்டு அன்று , ஜூன் 5 ஆம் தேதி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, இணைய வழிப் போராட்டம் நடத்தியது.

பிரிவினையை தூண்டும் வகையில், தொடர்ந்து போராட்டம் செய்வதையே, தன்னுடைய வாடிக்கையாக கொண்டு இருந்தனர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர்.

ஒரு காலத்தில், சென்னையில், பெரும் அளவில் தொழில் செய்து வந்த, தமிழர்களின் தொழிலைப் பறித்து, இன்று, தங்களுடைய வணிக வளாகங்களை, நாடு முழுக்க வியாபித்து  இருக்கும், பல குறுகிய கால முதலாளிகளுக்கு எதிராக, இதுவரை என்னப் போராட்டம் செய்தனர்? என பாமர மக்களும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர், நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உருது மொழி அறிந்தவர்கள், தங்களுடைய வியாபாரத்தை பெருக்குவதற்காக, அரபு நாட்டில் இருக்கும் மற்றொரு வியாபாரிகளிடம் உருது மொழி பேசி, வியாபாரம் செய்ய முடியும். அது போல, ஆங்கிலம் மொழி அறிந்தவர்கள், ஆங்கிலம் தெரிந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வியாபாரிகளிடம் பேசி, வியாபாரம் செய்ய முடியும். ஹிந்தி மொழி தெரிந்தவர்கள்,  இந்தியா எங்கும் பேசி, வியாபாரம் செய்ய முடியும்.

இந்த நாட்டின் மொழியையும், மக்களையும், அப்புறப் படுத்த வேண்டும் எனக்  கூறுபவர்கள், வேறு நாட்டு மொழியை, அவ்வாறு கூறுவார்களா? என தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு, இதுவரை யாரும் பதில் கூறவில்லை.

பள்ளிப் படிக்கும் காலத்தில் இருந்தே, மாணவ –  மாணவியர்கள், அனைத்து இந்தியர்களும், என்னுடைய சகோதரர் – சகோதரிகள் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் தமிழர்கள் மத்தியில், இவர்களின் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்கள், நிச்சயம், மக்களால் நிராகரிக்கப் படும் என்பதை நாம் அறிவோம்.

நாட்டில் எந்த இடத்தில், எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், உடனே அதற்காக மனம் வருந்தி, பணம், பொருள் உதவி செய்து வாழும் தமிழர்களிடையே, இது போன்ற பிரிவினைவாதிகளின் கருத்துக்கள், நிச்சயம் எடுபடாது என்பதே நிதர்சனம். எனினும், இவர்களது விஷமத் தனத்திற்கு, அப்பாவி எளிய மக்கள், இரையாகக் கூடாது என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில்…
அந்நியர் வந்து புகல் என்ன நீதி?
– பாரதியார்

அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it

One thought on “வாழும் உரிமை உண்டு..!

  1. சரியான தெளிவான கருத்துகள். பிரிவினை மட்டுமே பேசும் சிலரின் செவிட்டில் அறைவதாக உள்ளது.

Comments are closed.