மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமையான இன்று (டிச.12) முதல் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயல், மழை வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை பலர் இழந்துள்ளனர். அவர்கள் இழந்த சான்றிதழ்களை மீண்டும் பெறும் வகையில், அதற்கான கட்டணமில்லா சிறப்பு முகாம்களை மாவட்டம் வாரியாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களிலுள்ள 46 பகுதி அலுவலகங்களில் இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தினந்தோறும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்தந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதி அலுவலங்களில் இந்த முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.