இந்திய மக்களால் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் மாபெரும் சுதந்திர போராட்ட தலைவர்களுள் ஒருவர். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று நினைத்து போர் நடத்தி, அதற்காக இந்திய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய நாடு விடுதலை அடைவதற்கு பல போராட்டங்களை நடத்தி சாதனை படைத்தவர் சுபாஷ் சந்திர போஸ். பல சாதனை புரிந்த சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியுமா? வாங்க போஸின் வாழ்க்கை வரலாற்றினை படித்தறியலாம்..
சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு:
இந்திய நாட்டின் விடுதலைக்காக மிகவும் போராடியவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். சுபாஷ் சந்திர போஸிற்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தார்கள். போஸின் தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வ பக்தி அதிகம் கொண்டவராகவும் இருந்தனர்.
கல்வி:
சிறிய குழந்தை பருவத்திலிருந்தே கல்வி கற்பதில் சிறந்த மாணவராக விளங்கியவர் போஸ். பிரசிடென்சி கல்லூரியில் 1911-ம் ஆண்டு சேர்ந்து படித்தார். கல்லூரி பேராசிரியர் ஒட்டன் என்பவரை இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை கூறியதால் ஏற்பட்ட சண்டையால் கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார் போஸ். அதன் பின் சுபாஷ் சந்திர போஸ், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார்.
தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்காக சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு சென்றார். ஆனால் அந்த வேலையும் முழுமையாக நிலைக்கவில்லை. வேலையானது முழுமையாக நிலைக்காத காரணம் என்னவென்றால் ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை பார்ப்பது போன்று நினைத்து அந்த வேலையை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
போஸ் திருமண வாழ்க்கை:
நாட்டின் விடுதலைக்காக வியன்னா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். பயணம் செல்லும் போது ஆதிரிய கால்நடை மருத்துவரின் மகளான எமிலி ஷென்கல் என்பவரின் அறிமுகம் போஸிற்கு கிடைத்தது. இவருடைய சந்திப்பானது சிறிது நாளிலே காதலாக மாறியது. அடுத்த 1937-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 1942-அம் ஆண்டு இவர்களுக்கு அனிதா போஸ் என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு:
தன்னுடைய இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமென்று தான் வேலை பார்த்த பதவியையே ராஜினாமா செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சி.ஆர் தாஸ் என்பவரை அரசியல் குருவாக ஏற்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானம் செய்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவு செய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.
1928-ம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் ஆரம்பமான காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார் நேதாஜி.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பது தான் என்னுடைய கொள்கை” என கூறினார். நேதாஜி தலைவரானதும் ரவீந்திரநாத்தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டு விழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசானது நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார்.
நேதாஜி ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என நினைத்து இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை சென்றடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வந்ததும், அவருடைய அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.
ராணுவம்:
ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், சுபாஷ் சந்திர போஸ் பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944-ல் ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார். ஆனால் இந்திய தேசியப்படை, பல காரணங்களால் தோல்வியை மட்டுமே அடைந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனதில் சோர்வினை அடையாதீர்கள் என்று நம்பிக்கையை கொடுத்தார். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்டபடியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
நேதாஜியின் வீரமரணம்:
எனக்கு இரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தருகிறேன் என்று கூறிய நேதாஜி ஆகஸ்ட் 18-ம் தேதி 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் மேற்கொண்ட விமானம் பர்மோசா தீவிற்கு அருகே விபத்தாகி போஸ் இறந்துவிட்டதாக ஜப்பானிய வானொலி அறிவித்தது. நேதாஜி இறந்த செய்தியை இந்திய மக்கள் பலரும் நம்பவில்லை. கடைசிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு இறந்தவர்களுக்காக கொடுக்கப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், நேதாஜியின் ஆதரவாளர்கள் அவர் இறக்கவில்லை என்று ஏற்க மறுத்துவிட்டனர். போஸின் குடும்பவும் அந்த விருதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு தன்னையே அற்பணித்து கொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் நீங்காமல் இன்றும் இடம்பெற்று சென்றுள்ளார்.