கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேருவதற்கான முடிவை அறிவித்துள்ளார். நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. நாளை 7 ஆம் தேதி பாஜகவில் இணைவதாக கூறியுள்ளார். நீதிபதி கங்கோபாத்யாய் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு தனது ராஜினாமா கடிதத்தை தபால் மூலம் அனுப்பியதாக தெரிவித்தார்.
இன்று, ‘ஊழலில் மூழ்கி திளைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போராடும் ஒரே தேசியக் கட்சி பாஜக எனக் கூறி, மார்ச் 7ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல மனிதர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். பாஜகவிலிருந்து யார் அணுகியது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இரு தரப்பும் அணுகியது. நானும் பாஜகவை அணுகினேன், பாஜகவும் என்னை அணுகியது” என்றார். காங்கிரஸைப் பற்றி பேசும் போது, இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் ‘வம்ச அரசியல்’ என்று அவர் விமர்சித்தார்.
ஆகஸ்ட் 2024 இல் அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ள நிலையில் ராஜினாமா செய்வதற்கான அவரது முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.