ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருக்கும் நிலையில், யார் முதல்வர் என்பது தொடர்பாக கட்சியின் முக்கிய தலைகளுக்குள் குஸ்தி ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் என்றாலே கோஷ்டிப்பூசலுக்கு பேர்போன கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்றவே சட்டை, வேட்டிக் கிழிப்பு நடக்கும் காங்கிரஸில் முதல்வர் பதவியை கைப்பற்ற நடக்கும் மல்லுக்கட்டு பற்றி சொல்லவும் வேண்டுமா? இந்த நிலைதான், தற்போது ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிறது. நடந்து முடிந்த ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க.வோ 25 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, ஹிமாச்சல் முதல்வராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜெய்ராம் தா்கூர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. அதன்படி, தலைநகர் சிம்லாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, ஹிமாச்சல் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெற்றி பெற்ற 40 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரதிபா சிங்கை, முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கினர். பதிலுக்கு முதல்வர் ரேஸில் இடம்பிடித்திருக்கும் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆகவே, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கூடி ஹிமாச்சல் முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
நாற்காலிக்கு சண்டைப் போடும்…!