இந்திய ராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதுபோல, ‘கல்வான் ஹாய் சொல்கிறது’ என்று இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் ஹிந்தி நடிகை ரிச்சா சதா பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே எங்களது லட்சியம் என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கூறிவருகிறது. அந்த வகையில், காலாட்படை தினமான கடந்த அக்டோபர் 27-ம் தேதி பேசிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வீரவணக்கம். இவர்களின் வீரம் மற்றும் தியாகம் காரணமாகவே, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தற்போது நீடிக்கிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விரைவில் மீட்போம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, “அரசின் உத்தரவுகளை நிறைவேற்ற ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது. இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை, இந்திய அரசு எந்த உத்தரவை பிறப்பித்தாலும், அதை நிறைவேற்றும். எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம். இரு நாடுகளின் நலனுக்காக போர் நிறுத்த ஒப்பந்தம் உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது. அதேசமயம், எந்த நேரத்திலும் போர் நிறுத்த ஒப்பந்தம் உடைந்தாலும், நாங்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று கூறியிருந்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி கூறியதை அவரது படத்துடன் பாபா பனாராஸ் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை ரீ ட்வீட் செய்திருந்த ஹிந்தி நடிகை ரிச்சா சதா, “கல்வான் ஹாய் சொல்கிறது” என்று பதிவிட்டிருந்தார். அதாவது, 2020-ம் ஆண்டு இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அப்போது, நமது ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கு ஏற்பட்ட மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை சுட்டிக்காட்டி ‘கிழிச்சாங்க’ என்கிற ரீதியிலும், இந்திய ராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதுபோலவும், இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் அவரது பதிவு இருந்தது.
இதையடுத்து, பா.ஜ.க.வினரும், தேசநல விரும்பிகளும் நடிகை ரிச்சா சதாவுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். பா.ஜ.க.வின் மஞ்சிந்தர் சிங் சிர்சா கமென்ட்டில், “அவமானகரமான ட்வீட் இது. விரைவில் திரும்பப் பெறப்பட வேண்டும். நமது ஆயுதப் படைகளை அவமதிப்பது நியாயமானது அல்ல” என்று ட்வீட் செய்திருந்தார். இதேபோல ஏராளமான சமூக வலைதள பயனர்களும் நடிகை ரிச்சா சதாவுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, மேற்படி ட்வீட்டை நீக்கிய ரிச்சா, மன்னிப்பும் கோரினார். ரிச்சா சதா, ‘ஹேங்க்ஸ் ஆப் வாஸிப்பூர், பங்கா, தாஸ் தேவ், த்ரீ ஸ்டோரிஸ், புக்ரே, ஷகீலா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஷகீலா படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்திருந்தார். இவர், நடிகர் அலி ஃபைசல் என்கிற இஸ்லாமியரை காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பச் சரி, அப்பச் சரி!