முப்பத்திரண்டே வயதிற்குள் பாரதத்தை மும்முறை வலம் வந்து, சீடர்கள் பலரை உருவாக்கி, கவியாக பல நூல்கள் படைத்து, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்ற மகா காவியங்களுக்கு விளக்க உரை எழுதி, பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட பின்னரும் தலைசிறந்த துறவியாக, சிறந்த ஒருங்கிணைப்பாளராக, ஒப்பற்ற ஞானகுருவாக போற்றப்படுகின்ற புண்ணிய புருக்ஷர் ஶ்ரீஆதிசங்கரர்.
சங்கரரின் அவதாரம் மிகவும் தேவையான காலகட்டத்தில் நிகழ்ந்தது. மக்கள் அறியாமை என்னும் இருளில் மூழ்கி, வேதநெறியிலிருந்து விலகி, புதுப்புது தெய்வங்களை கண்டுபிடித்து கொண்டாடிவந்தனர். இவர் காலத்தில் பாரதம் முழுவதும் 72 சமயங்கள் இருந்தன. அதனை மீட்க அவர், பயங்கரமான வழிபாடுகளையும், இந்திரிய வேகத்தையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, இறைவனை, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் முதலான ஆறு வித சாத்வீக (சண்மத) வழிபாட்டு முறைகளை கொண்டு வணங்கும் முறையை வகுத்தார். கேரளாவில் திருச்சூருக்குத் தென்கிழக்கே 32 மைல் தொலைவிலுள்ள காலடி என்னும் கிராமத்தில் சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதியினருக்கு, சிவகுருவின் கனவில் ஈசன் உரைத்ததுபோல், குறைந்த ஆயுளுடன் வைகாசி வளர்பிறை பஞ்சமியில் சங்கரர் பிறந்தார். சங்கரர் 3 வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் படித்து தேர்ந்தார். 4 வயதிலேயே தந்தையை இழந்த அவர், கல்வி பயில குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். தன் குருவின் தேவைகளை குறிப்பறிந்து நிறைவேற்றினார். தினமும் பிக்ஷயில் சேர்த்த பொருளை குருவிடம் சமர்பிப்பார்.
ஒருநாள் பிக்ஷக்கு சென்ற இடத்தில், பரம ஏழைப்பெண், அந்த ஏழ்மை நிலையிலும் தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என வருந்தினாள். வீட்டில் ஒரேயொரு நெல்லிக்கனி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அதை சங்கரருக்கு அளித்தாள். இதனை கண்ட சங்கரர் அப்பெண்ணின் வறுமையை போக்க எண்ணினார். மஹாலக்ஷ்மியை நினைத்து துதிக்க ஆரம்பித்தார். மஹாலஷ்மி தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிந்தாள். இந்த ஸ்துதி ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ என அழைக்கப்படுகிறது ஆதிசங்கரர் முறைப்படி கோவிந்த பகவத்பாதரிடம் சன்னியாசம் பெற விரும்பி, குருவைத் தேடி நர்மதா நதிக்கரையை அடைந்தார். நர்மதை பெருவெள்ளமாக மிகுந்த சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவர் தன் அபூர்வ சக்தியால் நதியின் சீற்றத்தை அடக்கி, மக்கள் உபயோகிக்கும்படி செய்தார். இப்படி சிறுவயதிலேயே பல பல அற்புதங்களை நிகழ்த்தினார். நர்மதா நதிக்கரையின் குகையிலிருந்த கோவிந்த பகவத்பாதரிடம் துறவறம் ஏற்று சீடரானார். குரு கோவிந்தர் அத்வைத சித்தாந்தத்தை சங்கரருக்கு உபதேசித்தார். உலகெங்கும் அத்வைத சித்தாந்தத்தை பரப்ப சங்கரருக்கு ஆணையிட்டார்.
முதலில் காசிக்குச் சென்று அத்வைத சித்தாந்தத்தை பிரசாரம் செய்தார். பலர் இவரின் புலமையை கண்டு ஆதிசங்கரரின் சீடரானார். சங்கரர் ஒருமுறை கங்கைகரையில் வயதான ஒருவர் ‘டுக்ருஞ்கரணே’ என இலக்கணத்தை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து, ‘பஜகோவிந்தம்’ எனத்தொடங்கும் இந்த பிரசித்தி பெற்றபாடலை சங்கரர் பாடியதாக கூறப்படுகிறது. இந்த நூல் உலகத்தின் நிலையற்ற தன்மையை பற்றியும், குருவினிடத்திலும், கடவுளிடத்திலும் பக்தியை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. கடவுளை உன்னிடத்தில் தேடு, கடவுளின் தன்மையை அறிந்துகொள், கடவுளை வழிபடு, கடவுளிடத்தில் அன்பு செய் என்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ‘மரணம் நெருங்கிவரும் தருவாயில் இலக்கணமா உன்னை காப்பாற்றபோகிறது’ என்பதாக ஆரம்பிக்கிறது. இவ்வாறாக பல பக்திநூல்களை இவர் இயற்றியுள்ளார்.
காட்டில் வசித்த வேடன் கண்ணப்பர் தலை சிறந்த பக்தர்களில் ஒருவன் என சிவானந்தலகரியில் ஆதிசங்கரர் பக்தியின் தன்மையை கூறும் பொழுது ஓரிடத்தில், (ஸ்லோகம் #63) குறிப்பிடுகிறார். தன் அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள்முடியும் தருணத்தை உணர்ந்த சங்கரர், அன்னைக்கு கொடுத்த வாக்குறுதியின்படி, காலடி சென்று அன்னைக்காக ‘மாத்ருகா பஞ்சகம்’ பாடினார். தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து, வளரும் எல்லா நிலைகளிலும், தாயின் தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் எடுத்துக்கூறி தாயின்மேன்மையை இந்த நூல் மூலம் உலகறியச் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டுவந்த 5 லிங்கங்களை பசுபதிநாத், பூரி, சிருங்கேரி, காஞ்சி, காசி ஆகிய 5 திருத்தலங்களுக்கு அளித்தார். சௌந்தர்யலஹரி,சுப்ரமண்ய புஜங்கம் முதலிய அரும் பெரும் பொக்கிஷங்களை நமக்கு கிடைக்கச்செய்தார்.
‘க்வாண்டம் பிஸிக்ஸ்’ இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதிசங்கரரின் அத்வைத் தத்துவத்தின் ஒரு பகுதியே. ’பிரஹ்மம் சத்யம், ஜகத்மித்யா, ஜீவா ப்ரஹ்மைவ நாபர’
I ஆதிசங்கரர்: இந்த உலகம் ஒரு மாயத்தோற்றம். (ஜகத்மித்யா) க்வாண்டம் பிஸிக்ஸ்: நாம் பார்க்கும் மற்றும் உணரும் உலகம் உண்மையல்ல, மனதினால் உருவாக்கப்பட்ட வெறும் 3D உருவங்களே.
II ஆதிசங்கரர்: (ப்ரஹ்ம சத்ய) ப்ருஹ்மமே இறுதியான உண்மை. க்வாண்டம் பிஸிக்ஸ் :(கான்சியஸ்) பிரக்ஞையே உண்மை
III ஆதிசங்கரர்: (ஜீவா ப்ரஹ்மைவ நாபர) பிரம்மாண்டம் என்பது உருவாக்கப்பட்டு, பரப்பிரம்மத்தில் கரைந்து போனது. ஜீவாத்மா பரப்பிரம்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல. அது பிரம்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம். க்வாண்டம் பிஸிக்ஸ்:அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. சில காலம் கழித்து ப்ரஞையுடன் ஒன்றிப் போயின. ஒவ்வொருவரும் பிரக்ஞையின் ஒரு பகுதியாக இருந்து பிரிக்கப்பட்டனர். பின்னர் பிரக்ஞையுடன் இணையவே வேண்டும். ஒருவன் பிரக்ஞையை உணர்ந்து விட்டால் அப்போது தேசம், காலம், மனம் எதுவுமேயல்லை. மனத்தினாலேயே ஜீவன் தன்னை உண்மையென நம்புகிறான். புலன்களால் ப்ரஹ்மத்தை உணரமுடியாது ஏனெனில் அவை ஒரு எல்லைக்கு உட்பட்டவை.
பேனாமுனையால் மட்டும் கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட போரினை வெல்லமுடியாது என்பதை உணர்ந்து மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டார். சுயநலமில்லாத துறவி, பாரததேசத்தின் அருமை, பெருமைகளை உணர வைத்து அதற்கேற்றார் போல் வாழும் வாழ்வினை போதித்தார். இந்த செயல்திட்டம் நிறைவேற பாரதமெங்கும் மடங்களையும், கோவில்களையும், கல்வி நிலையங்களையும், அதற்காக சில சட்ட வழிமுறைகளையும் ஏற்படுத்தினார். ஆதிசங்கரர் அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள். வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஶ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால் தான், அந்த புண்ணிய காலங்களெல்லாம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. ஶ்ரீ சங்கர ஜெயந்தி நிகழ்ந்திராவிட்டால், ஶ்ரீ ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்ரி, நவராத்ரி போன்ற புண்ணிய தினங்கள் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம் என்கிறார் காஞ்சிப் பெரியவர்.
ஆதிசங்கரர் அவதரித்த இன்று (மே 6) நாம் அனைவரும் விமர்சையாக சங்கர ஜெயந்தியை கொண்டாடுவோம்.
கட்டுரையாளர் : ராஜேஸ்வரி