தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றம் குன்றின் மேல் அமைந்துள்ள மங்கலாதேவி எனும் கண்ணகி கோவில் சிதிலமடைந்து இருப்பதாகவும் இதனை சீர்செய்திட தமிழக கேரள அரசுகள் முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோவில் சீரழிந்து வருவதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது.
கேரள தமிழ்நாடு எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றம் குன்றின் மேல் அமைந்துள்ளது மங்கலாதேவி எனும் கண்ணகி கோவில்.
கோவலனுக்கு தண்டனை அளித்த மதுரை பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு கோவலன் மீதான பழிச்சொல்லை துடைத்தெறிந்துவிட்டு இங்கு வந்து கற்புக்கரசி விண்ணேகினாள் என்கிறது சிலப்பதிகார இலக்கியம். இந்துக்கள் கண்ணகி தேவியை மங்கலதேவி என சித்திரா பௌர்ணமி அன்று கொண்டாடி வருகின்றனர்.
கேரள தமிழ்நாடு மக்களிடையே பிரிவினை தூண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி பயங்கரவாத குழுவான நக்சல்கள் முயற்சி செய்து மகங்கலாதேவி கோவிலை சிதைத்தனர்.
பிரிவினைவாதத்தை முறியடிக்க ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்து இயக்கங்கள் மூலமாக இரு மாநிலத்தவர்களும் சேர்ந்து அதனை சீர்படுத்தினர்.
தற்போது அந்த பகுதி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது அந்த கோவில் சிதிலமடைந்து இருப்பதை சீர்செய்திட தமிழக கேரள அரசுகள் முன்வர வேண்டும்.
இந்த தொன்மையான பராம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கோவில் இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைக்கு அற்புதமான எடுத்துக்காட்டு. எனவே இரு மாநில அரசுகள், வனத்துறை மற்றும் தொல்லியல் துறை இதனை கருத்தில் கொண்டு கண்ணகி கோவிலை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.