புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புகழ்பெற்ற அரங்குளநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகம், ஆடி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைப்பெறுவது வழக்கம். இந்த நிலையில் ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கோபுரத்தில் உள்ள சாமி சிலைகள் கீழே பெயர்ந்து விழும் அவல நிலையில் உள்ளது. இதற்கு இந்து முன்னணி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில், “ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நம் வரலாறு மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கிடும் திருக்கோவில்கள் பாழடைந்து சிதிலமடைந்து வருகின்றன.
வருமானம் அதிகமாக வரும் கோவில்களில் வாரிச் சுருட்டும் அறநிலையத்துறையே, சிதிலமடைந்து வரும் கோவில் கோபுரத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கள்ளிக்கோட்டை சிவன் கோவிலில் பாண்டியர் கால இரு துண்டு கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ள நிலையில், அழியும் நிலையில் உள்ள இத்திருக்கோவிலை பாதுகாக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து கோயில்களுக்கு நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என்று திமுக அரசு பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பெருமை பேசி வருவதையும், எவ்வாறு பக்தர்களிடம் கட்டண கொள்ளை அடிக்கலாம் என்பதையுமே வழக்கமாக கொண்டுள்ளார்களே தவிர, வருவாய் ஏதும் இன்றி ஒரு நேர பூஜைக்கு கூட சிரமப்படும் கோயில்களையும், இதே போன்ற புராதானமான கோயில்களையும் புனரமைப்பதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. இந்நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ள கோவில்களை தமிழக அரசு சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமம் உடையார் சுவாமி கோவிலின் முன் மகாமண்டபம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.