கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 6 வீடுகள் முழுமையாக இடிந்தன. 30 வீடுகள் சேதமடைந்தன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து விநாடிக்கு 11, 000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் புத்தனாறு, பரளியாறு, வள்ளியாறு, பழையாறு, தாமிரபரணி ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அணை ஓரப் பகுதிகள் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 2 நாட்களாக மழை நின்றதை தொடர்ந்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இரு அணைகளில் இருந்தும் நேற்று விநாடிக்கு 2,982 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மழை இல்லாவிட்டால் நீர் வெளியேற்றம் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொதுப்பணித் துறை நீராதார துறையினர் தெரிவித்தனர். இதனால் குமரி மாவட்டத்துக்கு மழை ஆபத்து சற்று நீங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை நின்ற போதும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பால் அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் இங்கிருந்து சுற்றுலா பயணிகள் நேற்றும் கன்னியாகுமரிக்கு வரவில்லை. குமரியில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால் நேற்று 3-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.