ஹைதராபாத் விடுதலை தினம் புறக்கணிப்பு: அமித்ஷா காட்டம்!

ஹைதராபாத் விடுதலை தினம் புறக்கணிப்பு: அமித்ஷா காட்டம்!

Share it if you like it

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் ஓட்டுவங்கி அரசியல் காரணமாக, இம்மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடத் தயாராக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, பல சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது. ஆனால், நிஜாம் ஆட்சியாளர்கள் வசமிருந்த ஹைதராபாத் மட்டும் இணையவில்லை. இதனால், மன்னராட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர். இதன் காரணமாக, 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதியை ஹைதராபாத் விடுதலை தினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், நிகழாண்டு பா.ஜ.க. சார்பில் ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ என்ற பெயரில் மாநிலம் முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று ஹைதராபாத் வந்தார். செகந்தராபாத் ராணுவ மைதானத்தில் நடந்த விழாவில் அமித்ஷா பேசுகையில், “நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அப்போது, பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்து இந்தியா உருவானது. ஆனாலும், ஹைதராபாத் மட்டும் இணைக்காமல் நிஜாம்களே ஆட்சி செய்து வந்தனர். சில காலம் நிஜாம்களின் அடியாட்களுக்கு பயந்து வந்த மக்கள், பின்னர் கிளர்ந்து எழுந்தனர். தெலங்கானா, ஹைதராபாத் – கர்நாடகா, மரத்வாடா மக்கள் இப்பகுதியில் இருந்த கொடுமைக்காரர்களின் அட்டூழியத்திற்கு எதிராகவும், இந்தியாவுடன் சேர்வதற்கும் தைரியமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, 13 மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 17-ம் தேதி ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தனர். அந்த விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இதற்கு பல அரசியல் கட்சிகளும் உறுதியளித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடவில்லை. காரணம், ஓட்டுவங்கி அரசியலும், பயமும்தான். உங்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றுங்கள் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்களை கொடுமைப் படுத்தியவர்கள் இனிமேல் நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது. தெலங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மக்களின் விருப்பத்திற்கேற்ப ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


Share it if you like it