ஹிந்து மத நம்பிக்கையால் தான் ஊக்கம் பெற்றதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
பிரிட்டன் நாட்டில் ஜூலை 4- ஆம் தேதி பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது. இதையடுத்து, லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலில் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் சனிக்கிழமை மாலை வழிபாடு மேற்கொண்டனர்.
கோயில் மைதானத்துக்குள் அவர்களது பாதுகாப்பு வாகனம் நுழைந்ததும் பொதுமக்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அதன் பிறகு அவர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையில் இந்தியா வென்றதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டு அங்கு கூடி இருந்த மக்கள் மத்தியில் ரிஷி சுனக் பேசியதாவது: நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன். உங்களைப் போலவே நான் பின்பற்றும் மதத்தின் நம்பிக்கைகளால் ஊக்கம் பெற்றுள்ளேன். பகவத் கீதையை கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
பலனை எதிர்பார்க்காமல் கட மையைச் செய்ய வேண்டும் என்பதே நம் மதம் நமக்கு கற்றுத் தரும் பாடமாகும். இதைத்தான் எனது பெற்றோரும் எனக்கு கற்பித்தனர். அதை என் வாழ்நாள் முழுவதும் நான் தொடர்ந்து பின்பற்றுவேன். இருப்பினும், பல இனத்தவர், பல மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு பிரிட்டன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அனைத்து மதத்தினருக்கும்
உங்களின் ஆதரவோடு ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை நான் அமைத்துத் தருவேன் என உறுதியளிக்கிறேன். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்தபோது அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு மேற்கொண்டபோது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன் என்றார்.