நான், இந்திய பிரதமர் மோடியின் ரசிகன். மோடி இந்தியா மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்தியாவில் இருந்து நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு, முக்கிய பிரபலங்கள் பலரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வும், ட்விட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெஸ்லா, இந்தியாவில் பெரியளவில் முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இச்சந்திப்பின்போது மேற்கண்ட முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின்போது பேசிய எலான் மஸ்க், தான் பிரதமர் மோடியின் ரசிகன் என்று கூறியதோடு, உலகிலுள்ள பெரிய நாடுகளில் இந்தியா அதிக உறுதியுடன் இருப்பதாகவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி நாட்டின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய தன்னைப் போன்றோருக்கு உந்துதலாக இருப்பதாகவும் தெரிவித்த எலான் மஸ்க், அடுத்தாண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டிருப்பதாகவும், தங்களின் ஸ்டார்லிங்க் இணைய தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் தொலைதூர கிராமப்புறங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு சேவை வழங்க முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.