பிரபல ‘யு டியூபர் சவுக்கு சங்கரை, சென்னை மாநகர போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், 48. பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேனி மாவட்ட போலீசார், காரில் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிந்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள, சங்கரின் அலுவலகம், மதுரவாயலில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி, கஞ்சா சிகரெட், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ‘ஹூண்டாய் வென்யூ’ கார், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சங்கர் மீது, சென்னை மாநகர போலீசார், மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ‘டெண்டர்’ விவகாரம் குறித்து, போலி ஆவணங்கள் தயாரித்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளன; இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பல வழக்குகளும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது சவுக்கு சங்கரின் கைகளை போலீசார் சுற்றி நின்று தாக்கியதாகவும், இதில் அவரது கை உடைக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மதுரை நீதிமன்றத்தில் வலது கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில் சவுக்கு சங்கரை போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். முன்னதாக மருத்துவமனையில் சவுக்கு சங்கர் உடல் நலம் தொடர்பாக ஆய்வுக்காக அழைத்து சென்றனர்.
அப்போது வீடியோ கேமராவை பார்த்த சவுக்கு சங்கர் எனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் கூறினார்.