திருவண்ணாமலை திருத்தலத்தில் வந்து தங்கி இறையருள் பெற்ற ஞானியர் பலர். அவர்களுள் “மகான் ஸ்ரீ ரமண மகரிஷியும்” ஒருவர். மகான் ரமண மகரிஷி எளிமையான, காவி உடுத்தாத சந்நியாசியாய் இறுதிவரை வாழ்ந்தார். ரமணரின் உபதேசங்கள் மிகவும் எளிமையானதும் வலிமையாதுமாகும்.. இவர் மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இக்கட்டான நிலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று தனக்கே உரித்தான கனிவான வார்த்தைகளால் போதித்தவர்.
“நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்” என்று நல்ல நட்பின் வழியாக அறியாமை இருளை போக்கச் சொன்ன அற்புத மகான் ரமண மகரிஷி. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. மௌனமே அவரது பேச்சு மற்றும் ஆசீர்வாதம் ஆகும். ‘நான் யார்’ எனும் தத்துவ விசாரமே ஸ்ரீரமணரின் கொள்கை. தத்துவம் மற்றும் அருள்மொழி ஆகும்.
திருவண்ணாமலை வந்தார் மகான் ரமண மகரிஷி:
மதுரைக்கு அருகில் உள்ள அருப்புகோட்டையில் இருந்து உள்ளே செல்லும் திருச்சுழி எனும் கிராமத்தில் ஸ்ரீமான் சுந்தரம் அய்யர், அழகம்மையார் தம்பதியருக்கு குழந்தையாக ரமண மகரிஷி 1879, டிசம்பர், 30ம் தேதி, மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். இவரின் பூர்வாசிரமப் பெயர் வெங்கட்ராமன். திண்டுக்கல்லிலும், மதுரையிலும் அவரது படிப்பினை தொடர்ந்தார். படித்துக் கொண்டிருக்கும்போது தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருமந்திரம் செய்யுட்களில் மனத்தை பறிகொடுத்தார். ரமண மகரிஷி சிறுவயதாக இருக்கும்போது திருவண்ணாமலையில் உள்ள உறவினர் ஒருவர் ரமணரின் இல்லத்துக்கு அடிக்கடி வருவார். அவர் திருவண்ணாமலையின் மேன்மையைப் பற்றி அவரிடம் கூறுவார். அதனால், ரமணருக்கும் அங்கே செல்ல வேண்டும் என்று தீராத ஆவல் ஏற்பட்டது. தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்தத்தன் விளைவாக இறைவனைப் பற்றி அறிதலில் அவருக்கு நாட்டம் அதிகமாக இருந்தது. உறவினர் ஒருவரின் மரணத்தில் தான் அவருக்குள் பல கேள்விகள் பிறந்தது. மரணிப்பது வெறும் உடல் மட்டுமே. ஆன்மாவிற்கு மரணம் இல்லை என்னும் உண்மையை உணர்ந்தார். ‘நான் யார்?’ எனும் ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்தார். ரமணருக்கு ஆன்மிகத் தெளிவு பிறந்ததும் அனைத்தையும் துறந்து, வீட்டை விட்டு வெளியேறி 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.
சேஷாத்ரி சுவாமிகளின் ஆதரவு:
“தான் யார்” என்னும் கேள்வியைச் சுமந்துகொண்டு, திருவண்ணாமலைக்கு வந்த ரமணர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விஷமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தில் அமர்ந்தார். அண்ணாமலையார் கோயிலில் இருக்கும் பாதாள லிங்க சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்து வந்த ரமணரை, மகான் சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். அப்போது தன்னைக் காணவரும் பக்தர்களுக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணரைக் குறித்துச் சொல்லி அவரைப் பாதுகாக்கும்படியும் கூறினார். இவ்வாறு சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆதரவும் ரமணருக்குக் கிட்டியது. பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் வந்து தங்கினார்.
நிஷ்காம்ய கர்மம் (பலனை எதிர்பாராமல் செயலைப் புரிவது) பற்றிய விளக்கம்:
வேலூர் வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரங்காச்சாரி என்பவர் ஒரு நாள் ரமண மஹரிஷியிடம் நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன என்று கேட்டார். பதில் சொல்லாமல் மௌனமாக ரமணர் திருவண்ணாமலை மீது ஏறலானார். பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பண்டிதரும் தொடர்ந்தார்.
வழியிலே முள் நிறைந்த கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதை ரமணர் கையில் எடுத்துக் கொண்டார். ஓரிடத்தில் உட்கார்ந்து மெதுவாக அந்த முட்களைச் செதுக்கி எடுத்தார். கம்பில் இருந்த முண்டு முடிச்சுகளைத் தேய்த்து அதைச் சீராக்கினார். ஒரு சொரசொரப்பான இலையை எடுத்து அதைத் தேய்த்து வழவழப்பாக்கினார்.
சுமார் ஆறு மணி நேரம் இந்த வேலை தொடர்ந்தது. அனைவரும் இதைப் பார்த்து எப்படி இருந்த கம்பு இப்போது எப்படி மாறி உள்ளது என வியந்தனர்.
பிறகு ரமணருடன் பக்தர்கள் நடக்க தொடங்கினர். அங்கே ஒரு ஆடு மேய்ப்பவன் தனது கம்பைத் தொலைத்து விட்டு மிக்க கவலையுடன் இருக்க, அவனைப் பார்த்த மஹரிஷி தன் கையிலிருந்த கம்பை அவனிடம் கொடுத்து விட்டு மேலே நகரலானார். தனது கேள்விக்கு நடைமுறை பதிலே கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தார் பண்டிதர். பிரதிபலன் எதிர்பாராமல் தம் கடமையைச் செய்வதே நிஷ்காம்ய கர்மம்!
மௌனமே பதில்:
பல சமயங்களில் மகானை காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவருடன் நிகழ்ந்த சந்திப்பு நம்மை நெகிழச் செய்யும். லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் பால் பிரன்டன் இந்து மதம் சார்பாக நிறைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைப் பெற நினைத்தார். அதன் பொருட்டு மனதில் எண்ணிலடங்கா கேள்விகளுடன் ரமணரைப் பார்க்க திருவண்ணாமலை வந்தார். ரமணரின் சீடர்களிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறுகிறார். யோகத்தில் அமர்ந்திருக்கும் ரமணரின் முன்னால் பால் பிரன்டன் அமர்ந்தார். கண் திறந்து அவரைப் பார்த்தார் ரமணர். நேரம் செல்லச் செல்ல, பால் பிரன்டனின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகுகிறது. மனதில் ஏகப்பட்ட கேள்விகளுடன் வந்தவர் எந்தக் கேள்வியையும் ரமணரிடம் கேட்கவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குப் பதில் கிடைத்துவிட்டது என்று அந்த இடத்தை விட்டுச் சென்றார்.
பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில், ‘தான் எண்ணற்ற கேள்விகளுடன் ரமணரை தரிசிக்கச் சென்றிருந்தபோது, தான் எந்தக் கேள்வியும் கேட்காமலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. அனைத்தையும் கடந்த ஒப்பற்ற ஞானி’ என்று அவரை குறிப்பிட்டு இருக்கிறார். பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரன்டனின் “எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான.. அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற அவரது புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.
ரமணரின் ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வரவழைத்தது. ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு வந்து, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி ரமண மகரிஷியிடம் உபதேசம் பெற்று அது பற்றி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு எழுதி அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் ஆர்வமுடன் வர ஆரம்பித்தனர்.
பாறையில் அமர்ந்த மகான்:
தினமும் காலை எழுந்ததும் சிறிது நேரம் ஆசிரமத்துக்கு வெளியே திருவண்ணாமலை ஊரை நோக்கியிருக்கும் பெரிய பாறையில் அமர்ந்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் ரமணர். எதற்காக இப்படி தினமும் உட்காருகிறார் என்று சீடர்களுக்குப் புரியவில்லை, ஒரு நாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தபோதும் அப்படி உட்கார்ந்து கொண்டிருந்தார். பொறுமை இழந்த சீடர்கள் அவரிடம் மழை பெய்யும் நாளிலாவது இப்படி உட்காருவதைத் தவிர்க்கலாமே என்றார்கள். அப்போது ரமணர், “அடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்னும் முதிய பெண்மணி இருக்கிறார். தினமும் என்னைப் பார்த்து விட்டுத்தான் செல்வார். ஒருநாள் வரவில்லை. மறு நாள் வந்தவரிடம் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டதற்கு ‘வயசாயிடுச்சு சாமி மேலேறி வரமுடியல ஆனா உங்களை பார்த்த பிறகுதான் தினமும் சாப்பிடுவது வழக்கம். அதனால காலைல நீங்க பாறையில உக்காந்திருந்தப்பதை பார்த்திட்டு சாப்பிட்டேன்’ என்றார். வயசான அந்தப் பெண்மணியை கஷ்டப்படுத்தக் கூடாதேன்னுதான் தினமும் நான் இந்தப் பாறையில உட்காருகிறேன்” என்றார்.
மகானும் மகா பெரியவாளும்:
ஒருசமயம் மகா பெரியவா, திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். ரமணரின் சீடர்கள், எதிரே வந்த மகா பெரியவாளிடம் தாங்கள் ரமணரின் சீடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு குகையில் ரமணர் தங்கியிருப்பதாகக் கூறினார்கள். மௌனமாக அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்ட மகா பெரியவா, ரமணரின் சீடர்களுக்கு ஆசி வழங்கினார். “தங்களின் குருவைப் பற்றி மகா பெரியவா ஏதும் விசாரிக்கவில்லையே…’’ என்று ரமணரின் சீடர்களுக்கு சிறிய வருத்தம். தங்களின் மன வருத்தத்தை ரமணரிடமும் தெரிவித்துள்ளனர். அதற்கு ரமணர், “நாங்க எப்பவும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றார். சந்தோஷத்தில் மனம் நிறைந்தார்கள் ரமணரின் சீடர்கள்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மகா பெரியவாளுக்கும் திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமணருக்கும் உள்ளுணர்வுத் தொடர்பு இருந்ததைப் பலரும் வியந்தார்கள்.
பாகுபாடு இல்லாத மகான்:
ஒருமுறை, ரமணாஸ்ரமத்தில் ஒரு பெரிய பூஜையின் நிறைவில் அன்னதானம் ஏற்பாடாகியிருந்தது. பல முக்கியப் பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர். அன்னதான நேரத்தில், நாடோடி மக்கள் பலரும், முக்கியப் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அன்னதானப் பந்தலில் நுழைந்துவிட்டனர். உடனே, அங்கிருந்த ஆஸ்ரம நிர்வாகிகள், “நாடோடிகளுக்கெல்லாம் கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கிறது. தயவு செய்து அங்கு செல்லுங்கள்” என்று சொன்னார். அதே போல பரதேசிகளும் அங்கிருந்து விலகிச் சென்றனர். அன்னதானம் தொடங்குவதற்காக ரமண மகரிஷி எங்கே என்று சீடர்கள் தேடினர். ஆனால், மகானைக் காணமுடியவில்லை. அவருடைய அறை, தோட்டம் என்று எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது, ஒருவர் ஓடியடித்துக்கொண்டு வந்து “கிழக்குப் பந்தலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்கிறார் வந்து பாருங்கள்” என்றார். எல்லோரும் அங்குச் சென்று பார்த்தால், ரமண மகரிஷி நாடோடி கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்திருந்தார். அதை கண்டவர் கண்களில் நீர் சுரந்தது. நிர்வாகி அவரிடம், “ஸ்வாமி, தாங்கள் ஏன் இங்கு வந்தமர்ந்தீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ரமணர், “நாடோடிகள் எல்லாம் கிழக்குப் பந்தலுக்குத்தான் போகவேண்டும் என்று விரட்டிக்கொண்டிருந்தனர். நானும் நாடோடிதானே, அதுதான் இங்கே வந்துவிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த நிர்வாகி அவர் பாதங்களில் வீழ்ந்து தன் அறியாமையை மன்னித்துக்கொள்ளச் சொன்னார்.
மகான் ஸ்ரீரமணர் அருளிய உபதேச மொழிகள்:
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர்.
மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.
“நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே… தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள்.
எண்ணங்களனைத்தையும் ஒரு முகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல், “நான் யார்” விசாரணை செய்ய வேண்டும். மனதை நீ வெளி விஷயங்களிலும், எண்ணங்களிலும் திசை திருப்பக்கூடாது. விருப்பும், வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம். மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது. அதுதான் தவம்.
கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுளை எளிதில் காணலாம்.
தீமைகளைச் செய்யாதீர்கள். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.
மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று. விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா, விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.
‘நான் யார்’ என்ற எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை, ஞானம், மோட்சம் ஆகும். எனவே “நான் யார்” என்று எண்ணங்கள் இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும்.
உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய்” என்பது அவர் அருள் உபதேசம்.
மகா சமாதி:
அவருடைய இறுதிக் காலத்தில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை. மற்றவர்கள் துக்கப்பட்டபோது தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை என்றும் புன்னகையுடன் கூறினார். சில மகரிஷிகள் தங்கள் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. 1950-ஆம் ஆண்டு, ஏப்ரல், 14 ஆம் நாள், இரவு 8.47 மணிக்கு பத்மாசனம் இட்டவாறே அமர்ந்திருக்க, மகான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது. இதன் மூலம் அருணாசல பகவானே, பூவுலக மக்களின் துயர் துடைக்க ரமணராய் அவதரித்தார் என்பது நிதர்சனமாயிற்று. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்து தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும வடிவில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே அவரை வணங்குவர் அனைவரும் நற்பலன்களை இன்றளவும் பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவல சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாசிரமத்தில் நூற்றுக் கணக்காணோர் தினமும் அங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !