இலவச பேருந்து திட்டத்தால் வருங்காலத்தில் பெரும் இழப்பு ஏற்படும் என கருதி ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து 2026க்கு பிறகு விலகிக் கொள்வதாக L&T நிறுவனம் அறிவித்துள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து 2026க்கு பிறகு விலகிக் கொள்வதாக L&T நிறுவனம் அறிவித்துள்ளது. L&T நிறுவனத்திற்கு 90 விழுக்காடு பங்குள்ள நிலையிலும், 65 வருடங்களுக்கு ஒப்பந்தம் உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம், அம்மாநில காங்கிரஸ் அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் தான். 20,000 கோடி ரூபாய் மதிப்பில் அந்நிறுவனத்தால் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2020ம் ஆண்டு முடிக்கப்பட்ட நிலையில், இலவச பேருந்து திட்டத்தால் வருங்காலத்தில் பெரும் இழப்பு ஏற்படும் என கருதுவதால் வெளியேறுகிறது. ரூபாய் 13,000 கோடி கடனுடனும், கடந்த சில வருடங்களில் ரூபாய் 2000 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், பெண்கள் மெட்ரோ ரயிலை மறுத்து இலவச பேருந்தில் பயணிப்பது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என கருதுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 5.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்த நிலை மாறி தற்போது 4.5 லட்சமாக குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவாகவும், வசதியாகவும் செல்வதற்கே மெட்ரோ திட்டம் பயன்பட்டுவந்த நிலையில்,
இலவசங்கள் தவறில்லை. ஆனால், அவை அரும்பாடுபட்டு உருவாக்கிய கட்டமைப்பை எப்படி குலைக்கின்றன, பொருளாதாரத்தை எப்படி சீரழிக்கின்றன என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஓட்டுக்களை பெறுவதற்காக எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகளை இந்த இலவச திட்டங்கள் விழுங்கும் போது, அதை சரிகட்ட, ஈடு செய்ய சொத்து வரி, மாநகராட்சி வரி அல்லது அத்தியாவசிய கட்டண சுமைகள் அதே மக்களின் மீது தான் சுமத்தப்படுகின்றன என்ற உண்மையை அரசியல் கட்சிகள் அல்லது ஆளும் கட்சிகள் மறைக்கின்றன.
இலவசங்கள் தவறில்லை, ஆனால் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கப் பெறவேண்டும் என்பது தான் உண்மையான சமூக நீதி. சம உரிமை என பேசும் சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் கட்டணம் இலவசம் என்ற கொள்கை ஆண், பெண் பாகுபாடாகவும் ஒரு சிலரால் பார்க்கப்படுகிறது. மேலும், சிறிது காலத்திற்கு பின்னர் இந்த இலவச திட்டம் நீக்கப்படுமேயானால், மக்கள் மத்தியில் அதாவது பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தும் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.