இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கி கவுரவித்திருக்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
டெல்லியைச் சேர்ந்த புளூகிராஃப்ட் பதிப்பகம் பாரத பிரதமர் மோடியையும், டாக்டர் அம்பேத்கரையும் ஒப்பிட்டு “அம்பேத்கரும் மோடியும்” என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டது. இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை பாரத பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதற்காக தமிழகத்தில் திராவிடக் கட்சியினராலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும், அம்பேத்கரிஸ்ட்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் இசைஞானி இளையராஜா.
மேலும், தனது கருத்தை இளையராஜா வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், தனது கருத்தை வாபஸ் பெற மறுத்துவிட்ட இளையராஜா, ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நான் உனை நீங்க மாட்டேன்’ என்கிற பாடல் வரிகளில் சில மாற்றங்களை செய்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருந்தார். இது திராவிட கும்பலை மேலும் சூடேற்றியது. இதனால், இளையராஜா மீது வன்மத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஆனால், இளையராஜாவோ அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில்தான், இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களில் 12 பேரை தேர்ந்தெடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ‘மேஸ்ட்ரோ’ பட்டம் வென்ற இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, இளையராஜாவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறையினரும், பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பாரத பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியை தமிழில் வெளியிட்டிருக்கிறார். அதில், “தலைமுறைகளை கடந்து இளையராஜாவின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது. எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். தனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு இளையராஜாவும் பதில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.