ஈரோடு மாவட்டத்தில் மலை கிராம பள்ளிகளின் தரத்தை உயர்த்திட, மக்கள் பங்களிப்புத் தொகை செலுத்தி 11 ஆண்டுகளாகியும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில், ஆசனூர் ஊராட்சியில் கோட்டாடை மலைக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி குழியாடா, ஒசட்டி, உப்பட்டி, புதுக்காடு, சோக்கிதொட்டி, கல்கூசி, பீமரதொட்டி தேவர்நத்தம், அட்டப்பாடி, சீகட்டி, கீள்மாவள்ளம், மேல்மாவள்ளம் என பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மலை கிராமங்கள் உள்ளன.
கடந்த 1961-ம் ஆண்டு, கோட்டாடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1996-ல், அது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 70 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கோட்டாடை கிராமத்துக்கு அருகில், தேவர்நத்தம் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும், மாவள்ளத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும் உள்ளன.
போக்குவரத்து வசதி இல்லை: கோட்டாடை நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்தவர்கள், 9-ம் வகுப்பிற்கு செல்வதாயின், 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆசனூர் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிக்குத்தான் செல்லவேண்டும். இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது.
குறிப்பாக, கோட்டாடை பகுதியிலிருந்து, ஆசனூர் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிக்கு, 60 மாணவ – மாணவியர் தினமும் பேருந்தில் செல்கின்றனர். பள்ளி நேரத்திற்கு பேருந்து இல்லாததால், காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்தில், காலை உணவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, பள்ளிக்குப் பயணிக்கும் இவர்கள், மாலை 6 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது.
இத்தகைய சிரமங்களால், பல மாணவ – மாணவியர் 8-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி வருகின்றனர். குழந்தைத் திருமணங்கள் நடக்கவும் இப்பிரச்சினை அடிப்படைக் காரணமாக உள்ளது.
ரூ. 1 லட்சம் பங்குத்தொகை: கோட்டாடை பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, இதற்கான பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்தது. இதன்படி, கிராம மக்கள் இத்தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தினர்.
பணம் செலுத்து 11 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பள்ளி தரம் உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதேபோல் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 121 மாணவர்கள் பயிலும் பவளக்குட்டை நடுநிலைப் பள்ளி மற்றும் 116 மாணவர்கள் பயிலும் கரளயம் நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தவும், பொதுமக்கள் தலா ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு வெளிவரவில்லை.
சட்டப்பேரவையில் அறிவிப்பு வருமா?: இதேபோல், அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 156 மாணவர்கள் பயிலும் கொங்காடை உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும், சோளகனை, கத்திரிமலை, குட்டையூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தவும் திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்ட மலைக்கிராம மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுத்தும் வகையில், பள்ளிகள் தரம் உயர்த்துதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள சட்டப்பேரவை பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மலை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.