ஜம்மு காஷ்மீரில் ரூ. 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி இன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.
விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டத்தைவுயம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியர்களுக்கு பணி நியமனகடிதங்களை விநியோகித்த மோடி, ‘விக்சித் பாரத், விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
மோடி திறந்து வைத்த ரயில்வே திட்டங்களில் பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் (48 கிமீ) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-ஸ்ரீநகர்-பனிஹால்-சங்கல்தான் பிரிவு (185.66 கிமீ) இடையேயான ரயில் பாதையும் அடங்கும்.
பள்ளத்தாக்கில் முதல் மின்சார ரயிலையும், சங்கல்டன் மற்றும் பாரமுல்லா நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு விரிவான மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS), விஜய்பூர் (சம்பா), ஜம்மு, திறந்து வைத்தார்.
பிப்ரவரி 2019 இல் அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. ஜம்மு விமான நிலையத்தில் புதிய டெர்மினல் கட்டிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
40,000 சதுர மீட்டருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் புதிய முனையக் கட்டிடம், பீக் ஹவர்ஸில் சுமார் 2,000 பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடியதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
ஜம்முவை கத்ராவுடன் இணைக்கும் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் இரண்டு பகுதிகள் (44.22 கிமீ) மற்றும் ஸ்ரீநகர் ரிங்ரோடுக்கான நான்கு வழிச்சாலைக்கான இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முக்கியமான சாலைத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.