ஆன்டிபயாட்டிக்’ மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், டாக்டர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில், அந்த மருந்து எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது என்பதை மிக துல்லியமாக குறிப்பிடுவது இனி கட்டாயம் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பல்வேறு தொற்றுகளை குணப்படுத்துவதற்காக, ‘ஆன்டிபயாட்டிக்’ எனப்படும் நுண்ணியிர்கொல்லி மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள், அவற்றை கொல்ல வடிவமைக்கப்பட்ட மருந்துகளின் செயல் திறனை முறியடிக்கின்றன.
இதன் காரணமாக, அந்த கிருமிகள் உடலில் இருந்து அழியாமல், மேலும் வளர்ச்சி அடைய துவங்குகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடலில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெறுகின்றன.
நாளடைவில், ஏ.எம்.ஆர்., என்றழைக்கப்படும், நுண்ணியிர் எதிர்ப்பு குறைபாடு ஏற்படுகிறது. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலகின் 10 கொடிய நோய்களில், இந்த நுண்ணியிர் எதிர்ப்பு குறைபாடு முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
எனவே, ‘ஆன்டிபயாட்டிக்’ பரிந்துரை மற்றும் விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்து டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ சங்கங்கள், மருந்தக சங்கங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளுக்கான இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதன் விபரம்: அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே, ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளை மருந்தகங்கள் விற்பனை செய்ய வேண்டும். மருந்து சீட்டின்றி வாடிக்கையாளர்களுக்கு அவற்றை விற்பனை செய்யக் கூடாது.
மேலும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அந்த குறிப்பிட்ட மருந்து எந்த நோய் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்ற காரணத்தை துல்லியமாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.