சில மாதங்களாக, ஆவின் பால் கொள்முதல் குறைந்ததால், வெண்ணெய், நெய் உற்பத்தி பாதித்தது.
இதையடுத்து, தீபாவளி பண்டிகை கால இனிப்புகள் தயாரிப்பதற்கும், நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டது.
அந்த வெண்ணெய், திருவண்ணாமலை ஆவின் தொழிற்சாலையில் நெய்யாக தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்டது. தீபாவளி முடிந்துள்ள நிலையில், நெய் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது.அது மட்டுமின்றி, கொழுப்பு சத்து அதிகமுள்ள பாலுக்கு பதிலாக, குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் விற்பனையில், ஆவின் கவனம் செலுத்துகிறது. இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்பு சலுகை வாயிலாக இந்த நெய்யை விற்க, ஆவின் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், லிட்டர் நெய் பாட்டிலுக்கு, 50 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் வரை நெய் விலை உயர்த்தப்பட்டது.
தற்போது, அதை விட குறைவாகவே விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சலுகை விற்பனை இன்று துவங்கி, 2024 ஜனவரி 20 வரை கிடைக்கும் என, ஆவின் அறிவித்துள்ளது.