அமீர்கானின் மகள் ஈரா கான் பிகினி உடை அணிந்தபடியே பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தரப்பில் அமீர்கானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் வலம்வரும் பிரபல நடிகர்களில் அமீர்கான் முக்கியமானவர். இவரது படங்கள் சீனாவில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. அமீர்கான் முதலில் 1986-ம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். இத்தம்பதிக்கு ஈரா கான் என்கிற மகளும், ஜுனைத் கான் என்கிற மகனும் உண்டு. இதன் பிறகு, 2005-ல் கிரண் ராவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். எனினும், இவர்களும் 2021-ல் பிரிந்து விட்டனர். இத்தம்பதிக்கு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் உண்டு. இதன் பிறகு, ரீனா மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இந்த சூழலில், அமீர்கான்- ரீனா தத்தாவின் மகள் ஈராவின் 25-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அமீர்கான், ரீனா தத்தா, சகோதரர் ஜுனைத் கான், அமீர்கானின் 2-வது மனைவி கிரண்ராவிற்கு பிறந்த ஆசாத் ராவ் கான், அமீர்கானின் ஃபிட்னஸ் கோச்சும் ஈரா கானின் காதலருமான நுபுர் ஷிகாரே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதில், ஈரா கான் பிகினி உடையில் பிறந்தநாள் கேக்கை வெட்டுவது, காதலருடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள்தான் அமீர்கானையும், அவரது மகள் ஈரா கானையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், பல்வேறு தரப்பினரும் ஈராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தாய், தந்தை முன்பு இப்படியா நீச்சல் உடையில் காட்சியளிப்பது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியரான அமீர்கான் பொதுவெளியில் எப்படி தனது மகளை நீச்சல் உடையில் பிறந்தநாள் கொண்டாட விடலாம் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, எச்சரிக்கையும் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இஸ்லாமிய மரபுகளை மீறியதாக சல்மான் கானுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாத்வா கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தற்போது அமீர்கானுக்கும் பாத்வா கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்ட பாடகி சோனா மொகபத்ரா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஈரா கானின் உடையைத் தேர்ந்தெடுத்தது அல்லது அமீர்கான் சொன்னது, செய்தது அல்லது செய்யாதது ஆகியவற்றைப் பற்றி ஆத்திரமடையும் மக்கள் அனைவரும் தயவுசெய்து கவனிக்கவும்; அவளுக்கு வயது 25. சுதந்திரமான, சிந்திக்கும், வயது வந்த பெண். அவள் தனது விருப்பங்களைச் செயல்படுத்துகிறாள். அதற்கு அவளுடைய அப்பாவின் அல்லது உன்னுடைய ஒப்புதல் தேவையில்லை. BUZZ ஆஃப்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அப்பதிவில் ‘ஆணாதிக்கம்’ மற்றும் ‘இந்தியா’ என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். சோனாவின் இந்த பதிவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் என கலவையாக பதில்கள் கிடைத்து வருகின்றன. எனினும், எதிர்ப்பு கருத்துகளே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.