ஆந்திர கடலில் மிதந்து வந்த தங்க நிறத்திலான தேரை, மீனவ மக்கள் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் புயல் காலங்களில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து ஏதாவது ஒரு பொருள் கடலில் அடித்து வரப்படுவது வழக்கம். அந்த வகையில், இலங்கையில் இருந்து படகுகள், மர்ம பொருட்கள், திசைகாட்டும் கருவி, மர்ம உருளை, கஞ்சா அகியவை தமிழகத்துக்கு கடலில் மிதந்து வந்திருக்கின்றன. இந்த சூழலில், தற்போது வங்கக்கடலில் அதிதீவிர அசானி புயல் உருவாகி இருக்கிறது. இந்த புயல், ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று (மே 11) கரையை கடக்கிறது. இதன் காரணமாக, அங்கு கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் தங்க நிறத்திலான தேர் ஒன்று கடலில் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு இழுத்து வந்தனர். தங்க நிறம் பூசப்பட்ட அந்த தேர் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை, மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். எனினும், இந்தத் தேர் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அது ஜப்பான், தாய்லாந்து அல்லது மலேசிய மொழியைப் போல இருக்கிறது. ஆகவே, இத்தேர் மேற்கண்ட நாடுகளில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை அதிகாரிகள் தேரை மீட்டு, இது எங்கிருந்து வந்தது என்று விசாரித்து வருகின்றனர்.