சீன எல்லையில் படையை குவிக்கும் இந்தியா!

சீன எல்லையில் படையை குவிக்கும் இந்தியா!

Share it if you like it

இந்திய ராணுவம் சீனாவை நோக்கி தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. இதற்காக, பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளில் 6 பிரிவுகளை லடாக் செக்டார் முதல் அருணாச்சல பிரதேசம் வரை மாற்றி இருக்கிறது.

இந்திய எல்லையான லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இதைத் தொடர்ந்து நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாகவே சீனாவுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய ராணுவம் வடக்கு எல்லையில் இருந்து எதிர்கொள்ளும் சவால்களைவிட, கிழக்குப் பகுதியில் இருந்து எதிர்கொள்ளும் சவால்கள்தான் அதிகமாக இருக்கிறது. ஆகவே, பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டருந்த தனது படைகளை இந்தியா மறுசீரமைத்து வருகிறது.

அந்த வகையில், சீனாவுடனான எல்லையில் இந்திய ராணுவத்தின் நிலைமை மற்றும் நிலைநிறுத்தம் குறித்து ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அப்போது, இந்திய நிலைகளுக்கு எதிராக சீனா அதிக எண்ணிக்கையில் துருப்புக்களை நகர்த்துவது தெரியவந்தது. இதையடுத்து, இந்தியாவும் சீனாவுக்கு எதிராக அதிகமான படைகளை நிலைநிறுத்த முடிவு செய்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராஷ்டிரிய ரைபிள்ஸின் ஒரு பிரிவை மாற்றியமைத்து, கிழக்கு லடாக் பிரிவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்பிரிவினர் அங்கு ஏற்கெனவே இருக்கும் 3 பிரிவினருடன் இணைந்து செயல்படுவார்கள்.

அதேபோல, உத்தரகாண்ட், ஹரியானாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையின் ஒரு பிரிவு, சீனர்கள் உரிமை கோரும் மத்தியக் கட்டளைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், வடக்கு கட்டளையை வலுப்படுத்த, லடாக் பகுதியில் ஒரு ஸ்ட்ரைக் கார்ப்ஸின் 2 பிரிவுகளை நியமித்திருக்கிறது. தவிர, பாகிஸ்தான் போர்முனையில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் ஒரு ஸ்டிரைக் கார்ப்ஸ், தற்போது வடக்கு எல்லைகளை நோக்கி மாற்றப்பட்டிருக்கிறது. அதோடு, கிழக்கு செக்டாரை வலுப்படுத்த, 17 மவுண்டன் ஸ்டிரைக் கார்ப்ஸ் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இது வடகிழக்கு பகுதி முழுவதையும் கவனித்து வருகிறது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கூடுதலாக ஒரு பிரிவும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோல, அஸ்ஸாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவை ராணுவம் விடுவித்து, சீன எல்லையை மட்டுமே கவனிக்கும் பணியை அளித்திருக்கிறது. இப்படி இந்திய ராணுவம் இரு முனைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், நீண்ட கால மரபுவழிப் போர்ப் பாத்திரங்களுக்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. அந்த வகையில், சீன எல்லைப் பகுதியில் சுமார் 50,000 துருப்புகளை நிலைநிறுத்தி இருக்கிறது இந்திய ராணும். இதன் மூலம், இனி எல்லையில் வாலாட்ட முடியாது என்று இந்திய ராணுவம் சீனப் படைகளுக்கு மறைமுகமாக சவால் விடுத்திருக்கிறது.


Share it if you like it